புகழ்பெற்ற விஸ்டன் இதழ் கடந்த 10 ஆண்டுகளுக்கான சிறந்த டி20 அணியை வெளியிட்டுள்ளது.
இதில் இந்திய வீரர்கள் விராட் கோலி மற்றும் பும்ரா இடம் பிடித்துள்ளனர். ஆரோன் பிஞ்ச் தலைமையிலான இந்த அணியில் எம்.எஸ் தோனி மற்றும் ரோகித் சர்மாவுக்கு இடம் கிடைக்கவில்லை.
விஸ்டன் அறிவித்துள்ள அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம் : 1. ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), 2. கொலின் முன்றோ, 3. விராட் கோலி, 4. ஷேன் வாட்சன், 5. மேக்ஸ்வெல், 6. ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), 7. முகமது நபி, 8. டேவிட் வில்லே, 9. ரஷித் கான், 10. பும்ரா, 11, லசித் மலிங்கா.
விராட் கோலி குறித்து விஸ்டன் இதழ் கூறுகையில், “கடந்த பத்தாண்டுகளில் டி20 போட்டிகளில் கோலி சிறந்த சராசரியை வைத்துள்ளார். வேகப்பந்து மற்றும் சுழல் பந்துகளுக்கு எதிராக சிறப்பாக செயல்படுகிறார். அணி வரிசையில் மூன்றாவது இடத்துக்கு தகுதியானவராக உள்ளார். தொடக்க வீரர்கள் ஆட்டமிழந்தால் சூழ்நிலைக்கு ஏற்றவாறு நிதானமாக ஆடுவார். அதே சமயம் ஆட்டம் சூடு பிடித்தால் வேகமாக ரன் எடுப்பார். சக வீரர்களுடன் இணைந்து வெற்றிப்பாதையை நோக்கி அணியை கொண்டு செல்வார்” எனத் தெரிவித்துள்ளது.
மேலும் பும்ரா குறித்து கூறுகையில், “ஒட்டுமொத்த எக்கானமி ரேட் 6.71 வைத்துள்ள வேகப்பந்து வீச்சாளர்களில் தென் ஆப்பிரிக்கா ஸ்டைனுக்கு அடுத்து பும்ரா இரண்டாவது இடத்தில் உள்ளார். இவர் கடந்த பத்தாண்டுகளில் டி20 போட்டியில் 216 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்” எனக் குறிப்பிட்டுள்ளது.