’நியூசிலாந்து கிரிக்கெட் அணி, கடைசிவரை சவாலாகவே இருந்தது’ என்று இந்திய கிரிக்கெட் கேப்டன் விராத் கோலி கூறினார்.
நியூசிலாந்து அணியுடனான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் நேற்று வெற்றி பெற்றது. இதனையடுத்து 3 போட்டிகள் கொண்ட தொடரை இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. கான்பூரில் நடந்த இந்தப் போட்டியில் விராத் கோலி 113 ரன்களும் ரோகித் சர்மா 138 ரன்களும் குவித்தனர்.
வெற்றிக்குப் பின் பேசிய இந்திய கேப்டன் விராத் கோலி, நியூசிலாந்து அணியை புகழ்ந்தார். அவர் கூறும்போது, ‘நியூசிலாந்து அணி, கடைசிவரை எங்களுக்கு சவாலாகவே இருந்தது. கடந்த மூன்று போட்டிகளிலுமே அந்த அணி சவாலைத் தந்தது. அதன் காரணமாக, நாங்கள் சிறப்பாக விளையாட வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டோம். அந்த அணி போராடிய விதம் பாராட்டக் கூடியது. சிறப்பாக விளையாடிய அந்த அணிக்கு என் வாழ்த்துகள். இந்தப் போட்டியில் முதலில் நாங்கள் சிறப்பாக அடித்து ஆடினோம். பேட்டிங்கிற்கு சாதகமாகவே விக்கெட்டும் இருந்தது. ஆனால், கடைசி 15 ஓவர்களில் ரன்களை வேகமாக குவிக்க முடியவில்லை. இதனால் 25 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம். இந்தப் போட்டி முக்கியம் என்பதால், எங்கள் வீரர்கள் கடுமையாக போராடினார்கள். முழுமையாக ஒட்டுமொத்த அணியும் இணைந்து போட்டியை, தொடரை வெல்ல வேண்டும் என்று நினைத்தேன். தனிப்பட்ட முறையில் நானும் நன்றாக ஆடியது போனசாக அமைந்துவிட்டது’ என்றார்.