இலங்கை அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி சதமடித்தார்.
காலேவில் நடந்துவரும் போட்டியில் 133 பந்துகளில் சதமடித்த அவர் 103 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விராத் கோலிக்கு, இது 17ஆவது சதமாகும். இதன்மூலம் டெஸ்ட் போட்டிகளில் 16 சதங்கள் அடித்திருந்த முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியை, கோலி முந்தினார். மேலும், அதேபோல டெஸ்ட் போட்டிகளில் 17 சதங்கள் அடித்திருக்கும் திலிப் வெங்சர்க்கார் மற்றும் விவிஎஸ் லட்சுமணன் ஆகியோரின் சாதனைகளை அவர் சமன் செய்தார். இந்த பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் (51 சதங்கள்) முதலிடத்திலும், அவருக்கு அடுத்த இடங்களில் ராகுல் டிராவிட் (36 சதங்கள்), சுனில் கவாஸ்கர் (34 சதங்கள்), சேவாக் (23 சதங்கள்) முகமது அசாரூதின் (22 சதங்கள்) ஆகியோர் இருக்கின்றனர். மேலும், கேப்டனாக விராத் கோலி 10 சதங்களைப் பதிவு செய்துள்ளார். அந்தவகையில் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரின் 9 சாதங்கள் சாதனையையும் அவர் முறியடித்தார்.