விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோரை இந்தியாவின் மூத்த வீரர்கள் வழிக்காட்டி வளர்த்தெடுத்தார்கள் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் கம்ரான் அக்மல் தெரிவித்துள்ளார்.
PakPassion.net என்ற இணையதளத்துக்கு பேசியுள்ள கம்ரன் அக்மல் "2007 உலகக் கோப்பை தோல்விக்கு பின்பு சச்சின் டெண்டுல்கர், விவிஎஸ் லட்சுமண், ராகுல் ட்ராவிட், சேவாக் ஆகியோரை இந்திய அணி தூக்கி எறிந்துவிடவில்லை. இந்த மிகப் பெரிய ஜாம்பவான்கள் தங்களால் இயன்றவரை அணியில் விளையாடினார்கள். மிக முக்கியமாக அடுத்த தலைமுறை வீரர்களை இவர்கள் உருவாக்கினார்கள்" என்றார்.
மேலும் பேசிய கம்ரான் அக்மல் "இப்போது விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் மிகப் பெரிய உயரத்தில் இருக்கிறார்கள். இப்போது வளர்ந்து வரும் லோகேஷ் ராகுல் ஆகியோரை இதற்கு உதாரணணாக சொல்லலாம். இத்தனை புகழை இவர்கள் அடைவதற்கு இந்திய அணியின் மூத்த வீரர்கள் வழிக்காட்டினர், வளர்த்தார்கள். ஆனால் பாகிஸ்தானில் இதுபோன்ற முறை மிகவும் தாமதமாகவே வந்தது" என்றார்.
தொடர்ந்து பேசிய கம்ரான் அக்மல் "பாகிஸ்தானில் முன்னாள் வீரர்களுக்கு போதிய அங்கீகாரமும் மரியாதையும் கொடுக்கப்படுவதில்லை. அப்படி கொடுக்கப்பட்டால் மிகப் பெரிய வீரர்கள் உருவாகுவார்கள். இப்போது முன்னாள் ஆல் ரவுண்டரான அப்துல் ரசாக்கும், ஷோயப் அக்தரும் இளம் வீரர்களை உருவாக்கும் முயற்சியில் இருக்கிறார்கள்" என தெரிவித்துள்ளார்.