கேப்டன் விராட் கோலியுடன் ஏற்பட்ட முரண்பாடுகளே, ராயல் சேலஞ்சர்ஸ் அணியை தோல்விபாதைக்கு அழைத்து சென்று விட்டதாக முன்னாள் பயிற்சியாளர் ரே ஜென்னிங்ஸ் (Ray Jennings) கூறியுள்ளார்.
இந்திய அணியின் கேப்டனும், ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டனுமான விராட் கோலி ரன் மெஷின் என்பதை யாராலும் மறுக்க இயலாது. கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில், 4 சதங்களுடன் 973 ரன்களை விளாசிய அவர், தொடரில் அதிக ரன் அடித்தோருக்கு வழங்கப்படும் ஆரஞ்சு நிற தொப்பியையும் கைப்பற்றினார். தனி நபராக அவர் தனது சாதனைகளை முன் வைத்தப் போதும், அவர் வழி நடத்தும் ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் அணி ஒரு முறை கூட கோப்பையை கைப்பற்றாதது அனைவருக்கும் சிறிது ஏமாற்றமாகவே இருந்து வந்தது.
காரணம் ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் அணியானது, இது வரை 3 முறை இறுதி போட்டியில் கலந்து கொண்டும், 2017 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளில் நடந்த தொடர்களில் இறுதிக்கட்டத்திற்கு நெருங்கியும் கோப்பையை கைப்பற்றவில்லை. இந்நிலையில் இந்த தொடர் தோல்விகள் குறித்து பேசிய ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரே ஜென்னிங்ஸ் “ஆரம்ப காலங்களில் விராட் கோலி கேப்டன்சியில் இருந்த தடுமாற்றங்களும், அவருக்கும் எனக்கும் இருந்த முரண்பாடுகளுமே அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது என்று கூறியுள்ளார்.
இது குறித்து கிரிக்கெட். காம் இணையதளத்திற்கு பேசிய அவர், ஆரம்பகாலங்களில் அணியில் இருந்த 30 வீரர்களையும் கவனிக்க வேண்டியதை தான் ஒரு பொறுப்பாகவே கருதியதாகவும், ஆனால் சில நேரங்களில் விராட் கோலி அதிலிருந்து விலகி தனியாக நின்றிருக்கிறார் எனவும் கூறியுள்ளார். மேலும் ஒரு கேப்டனாக தவறான வீரர்களை அவர் தேர்ந்தெடுக்கும் போது, என்னால் அது குறித்து எதுவும் கூறமுடியவில்லை என்றும் களத்தில் சூழ்நிலைகளுக்கு ஏற்ப வீரர்களை களம் இறக்குவதிலும், விராட் கோலிக்கும் தனக்கும் முரண்பாடுகள் இருந்ததாகவும், அதுவே பல நேரங்களில் அணியை தோல்விப்பாதைக்கு அழைத்துச் சென்று விட்டதாகவும் கூறியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் 177 போட்டிகளில் விளையாடி 5,412 ரன்களை குவித்துள்ள விராட்கோலி வழி நடத்தும் ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் அணியும், ஹைதராபாத் அணியும் வரும் செப்டம்பர் 21 ஆம் தேதி மோத உள்ளன எனபது குறிபிடத்தக்கது.