இந்த முறை கடுமையாக பயிற்சி மேற்கொண்டு உள்ளதாகவும், சிறப்பாக விளையாடுவேன் என்றும் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில் நம்பிக்கையோடு தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் நடைபெற்ற ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில், தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தியை ராஜஸ்தான் அணி இம்முறை ரூ.4 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. கடந்த முறை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வருணை ரூ 8.4 கோடிக்கு வாங்கியது. ஆனால் அவருக்கான வாய்ப்பும் சரியாக வழங்கப்படவில்லை, மேலும் கிடைத்த சில வாய்ப்புகளிலும் வருணால் ஜொலிக்க முடியவில்லை.
இது குறித்து புதிய தலைமுறைக்கு அவர் அளித்த பேட்டியில், “மீண்டும் ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா அணியில் வாய்ப்பு கிடைத்தது மிகவும் சந்தோஷமாக உள்ளது,. கடுமையாக பயிற்சியை மேற்கொண்டு வருகிறேன், இந்த முறை கண்டிப்பாக சிறப்பாக செயல்படுவேன் என நம்பிக்கையுடன் உள்ளேன். தமிழக வீரரான தினேஷ் கார்த்திக் எனக்கு தொடர்ந்து ஊக்கம் அளித்து வருகிறார். கொல்கத்தா அணியில் அவரின் தலைமையின் கீழ் சிறப்பாக விளையாடுவேன்” என்றார்.
மேலும், “எந்த ஆடுகளம் என்பதை நான் பார்ப்பதில்லை, அது பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தாலும் நமது 100 % ஆற்றலை வெளிப்படுத்த வேண்டும் என்பதில் கவனமாக உள்ளேன்” என்றார் வருண் சக்கரவர்த்தி.