வங்கதேச புலியை வேட்டையாடுமா ஜூனியர் இந்திய அணி ?

வங்கதேச புலியை வேட்டையாடுமா ஜூனியர் இந்திய அணி ?
வங்கதேச புலியை வேட்டையாடுமா ஜூனியர் இந்திய அணி ?
Published on

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் ஐசிசி ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இன்று இந்தியாவும் வங்கதேசமும் மோதுகின்றன. இதில் இந்தியா நான்கு முறை ஜூனியர் உலகக் கோப்பையை வென்ற சாம்பியன் அணி. ஆனால் வங்கதேசமோ இப்போதுதான் முதல் முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைகின்றனர்.

இறுதி ஆட்டத்துக்குள் நுழைவதற்கான அரையிறுதிப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தானை வீழ்த்தியது. மற்றொரு அரையிறுதியில் வங்கதேசமும் - நியூசிலாந்து அணியும் மோதியது. எல்லோரும், ஜூனியர் உலக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவும் - நியூசிலாந்தும் மோதும் என்றே நினைத்திருந்தனர். ஆனால், நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது வங்கதேசம்.

கடைசியாக 2018 ஆம் ஆண்டு நடந்த ஜூனியர் உலகக் கோப்பை காலிறுதிப் போட்டியில் இந்தியா - வங்கதேசம் அணிகள் விளையாடின. இதில் இந்தியா அபாரமாக விளையாடி வெற்றிப் பெற்றது. மொத்தமாக இவ்விரு அணிகளும் 7 முறை ஜூனியர் உலகக் கோப்பை போட்டிகளில் மோதியுள்ளன. அதில் இந்தியா 4 முறையும் வங்கதேசம் 1 முறையும் வெற்றிப் பெற்றுள்ளது. இரண்டு போட்டிகள் மோசமான வானிலை காரணமாக கைவிடப்பட்டுள்ளன.

வங்கதேச அணியை இந்தியா ஒரு போதும் குறைத்து மதிப்பிடாது என்றே கூறலாம். ஆம், கடந்த இரண்டு ஆண்டுகளில் நடைபெற்ற முக்கிய போட்டிகளில் இந்திய அணிக்கு நெருக்கடி கொடுத்து வந்திருக்கிறது வங்கதேசம். 2018 இல் நடைபெற்ற ஜூனியர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி அரையிறுதியில் இந்தியா 2 ரன்கள் வித்தியாசத்தில்தான் வெற்றிப் பெற்றது. அதேபோல 2019 ஜூனியர் ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிப் பெற்றது. இந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணிக்கு வங்கதேசம் கடுமையான நெருக்கடி கொடுத்தது. மேலும் கடந்தாண்டு ஜூலையில் இங்கிலாந்தில் நடைபெற்ற போட்டியில் வங்கதேசம் 2 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியுள்ளது.

5-ஆவது முறையாக பட்டம் வெல்லும் முனைப்பில் உள்ளது இந்திய அணி. இந்திய அணியைப் பொறுத்தவரை, தொடக்க வீரா்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால், திவ்வாயன்ஷ் சக்ஸேனா, பந்துவீச்சில் காரத்திக் தியாகி, ரவி பிஷ்னோய் ஆகியோர் அபாரமாக இந்த உலகக் கோப்பை தொடரில் விளையாடி இருக்கிறார்கள். அதேபோல முதல் முறையாக இறுதிச் சுற்றில் நுழைந்துள்ள உற்சாகத்துடன் களம் காண்கிறது வங்கதேசம். கேப்டன் அக்பா் அலி, பா்வேஸ் ஹூசைன், மஹ்முதுல் ஹாஸன், ஷோரிபுல் இஸ்லாம், உள்பட பல்வேறு வீரா்கள் இத்தொடரில் அசத்தியுள்ளனர்.

இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி சீனியர்களுக்கு நடந்தாலும், ஜூனியர்களுக்கு நடந்தாலும் சரி, எப்போதும் அதிக எதிர்ப்பு இருக்கும். அதனால், நிச்சயமாக இந்தப் போட்டியில் பரபரப்புக்கும் சுவாரஸ்யத்துக்கும் பஞ்சமிருக்காது என கூறலாம்.

போட்டி நடைபெறும் இடம்: போட்சேஃப்ஸ்ட்ரூம், தென் ஆப்பிரிக்கா

நேரம்: பிற்பகல் 1.30 மணி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com