தன்னைத்தானே கலாய்த்து தன்னுடைய ட்விட்டரில் சேவாக் பதிவிட்டுள்ளார்.
இந்திய அணியில் அதிரடி பேட்ஸ்மேன் ஆக வலம் வந்த வீரேந்திர சேவாக், 2015ஆம் ஆண்டு அனைத்து சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார். ஓய்வுக்குப் பின்னர் ட்விட்டரில் அவர் அவ்வவ்போது நகைச்சுவையாக பல்வேறு கருத்துக்களை பதிவிட்டுள்ளார். அவர் பதிவிடும் பதிவுகள் கிண்டலாக இருக்கும்.
இந்நிலையில், தன்னைத்தானே கலாய்த்து தன்னுடைய ட்விட்டரில் சேவாக் பதிவிட்டுள்ளார். 2011-ல் இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடர் பற்றியதுதான் அந்த ட்விட்டர் பதிவு. ஆகஸ்ட் 10-12 தேதியில் நடைபெற்ற அந்த டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்சிலும் சேவாக் தான் சந்தித்த முதல் பந்திலே அவுட் ஆனார். தன்னுடைய டக் அவுட்டை ஜீரோவை கண்டுபிடித்த இந்தியாவின் கணித மேதை ஆர்யபட்டருக்கு விருப்பமில்லாமல் சமர்ப்பிப்பதாக கிண்டலாக கூறியுள்ளார்.
சேவாக் தன்னுடைய ட்விட்டரில், “8 வருடங்களுக்கு முன்பு, 188 ஓவர்கள் பீல்டிங் செய்த பின்னர் பிர்மிங்காமில் இங்கிலாந்துக்கு எதிராக கோல்டன் டக் ஆனேன். விருப்பம் இல்லாமல் ஆர்யபட்டருக்கு மரியாதை செலுத்தினேன். தோல்வியடைவதற்கு ஜீரோ வாய்ப்பு இருந்திருந்தால்(வெற்றி), நீங்கள் என்ன செய்திருப்பீர்கள்?. இதனைக் கண்டுபிடியுங்கள்..” என அதில் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு இன்னிங்சிலும் டக் அவுட் ஆகி இருந்தாலும், தன்னம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையில் அவர் இந்த பதிவை எழுதியுள்ளார்.