சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 போட்டியில், மயங்க் அகர்வாலின் சிறப் பான ஆட்டத்தால் கர்நாடக அணி, முதன்முறையாக கோப்பையை கைப்பற்றியது.
ரஞ்சி டிராபியில் விளையாடும் அணிகளுக்கு இடையே, சையத் முஷ்டாக் அலி கோப்பை டி-20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வந்தது. கடந்த பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி தொடங்கிய இந்த தொடர், நேற்று வரை நடந்தது. இந்திய அணியில் இடம் பிடித்துள்ள முன்னணி வீரர்கள் விளையாடினர். இதன் இறுதி போட்டியில் கர்நாடகா-மகாராஷ்ட்ரா மாநில அணிகள் இந்தூரில் நேற்று மோதின.
முதலில் பேட் செய்த மகாராஷ்ட்ரா அணி 4 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக, நவுஷத் ஷேக் 41 பந்துகளில் 69 ரன்கள் எடுத்தார். கேப்டன் ராகுல் திரிபாதி 30 ரன் எடுத்தார்.
அடுத்து களம் இறங்கிய கர்நாடக அணி 18.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.
கர்நாடக அணி தரப்பில் ரோகன் கடாம் 39 பந்துகளில் 60 ரன்னும் மயங்க் அகர்வால் 57 பந்துகளில் 85 ரன்னும் எடுத்தனர். முஷ்டாக் அலி கோப்பையை கர்நாடக அணி வெல்வது இதுவே முதன்முறை.