ஐதராபாத் அணியின் அதிவேக பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக் சுட்டெரிக்கும் வெயிலிலும் அதே அதிவேகத்தில் பந்துவீசுவது குறித்த ரகசியத்தை பகிர்ந்துள்ளார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக், தற்போது இந்தியாவின் அதிவேக பந்துவீச்சாளராக உள்ளார். அவர் ஐபிஎல் 2022 இன் 28வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் மீண்டும் கவனம் ஈர்த்துள்ளார். லிவிங்ஸ்டனும் ஷாருக்கானும் பெரிய ஷாட்களை விளையாடி வரும்போது, பஞ்சாப் கிங்ஸ் 180 ரன்களுக்கு அருகில் ஸ்கோர் செய்யும் என எதிர்பார்த்தனர்.
ஆனால் அப்போதுதான் உம்ரான் தனது அசாதாரண வேகப் பந்துவீச்சைத் தொடங்கினார். சராசரியாக 150 kmh வேகத்தில் வீசும் உம்ரான் இன்று அதிகபட்சமாக 152.6 kmh வேகத்தில் வீசி பஞ்சாப் பேட்ஸ்மேன்களை திணறடித்தார். கடைசி ஓவரின் 2வது பந்தில் ஒடியன் ஸ்மித்தை வெளியேற்றினார். 4, 5வது பந்துகளில் ராகுல் சாஹர் மற்றும் வைபவ் அரோரா ஆகியோரை நீக்கினார். பஞ்சாபின் அர்ஷ்தீப் சிங் ரன் அவுட் ஆனதால் உம்ரானின் ஹாட்ரிக் வாய்ப்பு தவறிப்போனது. அந்த விக்கெட்டை உம்ரான் எடுத்திருந்தால், ஐபிஎல்லில் ஒரே ஓவரில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றிருப்பார்.
மதியம் 3.30 மணிக்கே ஆட்டம் துவங்கியதால் ஆடுகளம் மிகவும் சூடாக இருந்தது. ஆனால் தொடர்ந்து அதிவேகமாக பந்துவீசிய உம்ரானின் வேகத்தில் அது எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை. இன்னிங்ஸ் இடைவேளையில், ஐபிஎல் வர்ணனையாளர்களிடம் பேசினார் உம்ரான். அவர்கள் சூடான வெயிலில் பந்துவீசுவது கடினமாக இருக்கிறதா என்று கேட்டனர்.
அதற்கு உம்ரான் “நான் ஜம்முவில் இருந்து வருகிறேன், அங்கு கோடையில் 46 முதல் 47 டிகிரி வெப்பநிலை இருக்கும். நான் ஜம்முவில் பயிற்சி பெற்றேன் மற்றும் அங்குள்ள வெப்பத்தைப் பயன்படுத்தினேன். நான் உண்மையில் வெப்பத்தில் பந்துவீசுவதையே விரும்புகிறேன்” என்று கூறினார்.