பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு போட்டியின் போது மூக்கில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் சொட்டிய காட்சிகள் இணையத்தில் வைரலாகப் பரவி அவரது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
யுஇஎஃப்ஏ நேஷன்ஸ் லீக் தொடரில் செக் குடியரசு அணிக்கு எதிரான போட்டியில், கோல் கம்பத்திற்குள் அருகே வந்த பந்தை போர்ச்சுக்கல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோலாக்க முயன்றார். அப்போது செக் குடியரசு அணியின் கோல் கீப்பர் தாமஸ் வாக்லிக் (TOMAS VACLIK) பந்தை பிடிக்க வந்த போது இருவரும் பலமாக மோதி கீழே விழுந்தனர்.
இதில் ரொனால்டோவின் மூக்கில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. உடனடியாக மைதானத்திற்கு விரைந்த மருத்துவர்கள் ரொனோல்டோவிற்கு முதலுதவி சிகிச்சை வழங்கினர். இருப்பினும், சிறிது நேரத்திற்கு பிறகு ரொனால்டோ மீண்டும் களமிறங்கி வழக்கம்போல விளையாட தொடங்கினார். அடுத்தடுத்து கோல்களை அசால்ட்டாக போர்ச்சுகல் அணி அடிக்கவே, 4-0 என்ற கணக்கில் அந்த அணி செக் குடியரசு அணியை வீழ்த்தியது.
இந்த ஆண்டு FIFA உலகக் கோப்பைக்குப் பிறகு யூரோ 2024 இல் பங்கேற்க ஆர்வமாக இருப்பதால், எந்த நேரத்திலும் கால்பந்து விளையாடுவதை நிறுத்த விரும்பவில்லை என்று கிறிஸ்டியானோ ரொனால்டோ சமீபத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.