இந்தியாவுக்காக ஜூனியர் உலகக் கோப்பையை வென்ற கேப்டனான உன்முக்த் சந்த் தனது 28 வயதில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுப்பெறுவதாக அறிவித்துள்ளார்.
டெல்லியைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் உன்முக் சந்த் கடந்த 2012-ம் ஆண்டு ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு தலைமை தாங்கி கோப்பையை பெற்றுக்கொடுத்தார். அந்த உலகக் கோப்பையில் கேப்டனாக செயல்பட்ட உன்முக் சந்த், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் 111 ரன்கள் விளாசி 226 ரன் இலக்கை சேஸ் செய்து இந்தியா வென்றது. இந்திய கிரிக்கெட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக பார்க்கப்பட்ட உன்முக்த் சந்துக்கு இந்திய சீனியர் அணியில் கடைசி வரை இடம் கிடைக்கவில்லை.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி, ராஜஸ்தான், மும்பை ஆகிய அணிகளுக்காக விளையாடியும் பெரியளவில் ஜொலிக்கவில்லை. பின்பு 2017 இல் டெல்லி அணியிலிருந்து நீக்கப்பட்டார். பிறகு உத்தராகண்ட் அணியில் இணைந்து விளையாடினார். எனினும் அவரால் எதிர்பார்த்த அளவுக்கு ரன்கள் எடுத்து கவனம் ஈர்க்க முடியவில்லை. முதல் தர கிரிக்கெட்டில் 3379 ரன்கள் எடுத்த உன்முக்த் சந்த், 28 வயதில் இந்திய கிரிக்கெட்டிலிருந்து விலகியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் " கடந்த சில வருடங்களாக வாய்ப்புகள் மறுக்கப்பட்டன. இதையடுத்து பிசிசிஐக்கு விடை கொடுத்து உலகம் முழுவதிலும் உள்ள வாய்ப்புகளைத் தேடிச் செல்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார் உன்முக்த் சந்த்.