அடுத்தாண்டு ஐபிஎல்லில் மேலும் இரண்டு அணிகள்?

அடுத்தாண்டு ஐபிஎல்லில் மேலும் இரண்டு அணிகள்?
அடுத்தாண்டு ஐபிஎல்லில் மேலும் இரண்டு அணிகள்?
Published on

2022 ஐபிஎல் போட்டிகளில் மேலும் இரண்டு புதிய அணிகள் இடம் பெறக் கூடும் என்றும் அதற்கான ஒப்பந்தப்புள்ளி விரைவில் நடைபெறும் என்று பிசிசிஐ தரப்பில் இருந்து தகவல் வெளியாகி இருக்கிறது.

ஐபிஎல் 2021 சீசன் கொரோனா தொற்றின் பாதிப்பு காரணமாக பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த தொடரின் விடுபட்ட போட்டிகள் வரும் செப்டம்பர் 19-இல் துவங்கி அக்டோபர் 15 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. அதற்காக அனைத்து ஐபிஎல் அணிகளும் ஆயத்தமாகி வருகின்றன. இதில் சில அணிகள் பயிற்சிக்காக ஏற்கெனவே அமீரம் சென்றுவிட்டன.

இந்நிலையில் இப்போது 8 அணிகள் பங்கேற்று வரும் நிலையில் அணிகளின் எண்ணிக்கையை 2022- ஆம் ஆண்டில் இருந்து 10 ஆக உயர்த்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இதனையடுத்து புதிய இரு அணிகளுக்கான உரிமத்தை பெற விரும்பும் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்று பிசிசிஐ அழைப்புவிடுத்து ஒப்பந்தப் புள்ளி கோரியுள்ளது. டெண்டர் படிவத்தில் விதிமுறைகள், நிபந்தனைகள் போன்ற விவரங்களும் இடம் பெற்றுள்ளன. ஆண்டுக்கு குறைந்தது ரூ.3 ஆயிரம் கோடி வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களே விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் மூன்று நிறுவனங்கள் இணைந்து ஒரே பெயரில் அணியை வாங்க விண்ணப்பிக்கலாம். ஆனால் 3-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இணைந்து கூட்டாக அணியை வாங்கும் முயற்சிக்கு அனுமதி இல்லை. ஒப்பந்தப்புள்ளிக்கான விண்ணப்பத்தை அக்டோபர் 5 ஆம் தேதி வரை வாங்கிக் கொள்ளலாம். இதன் விலை ரூ.10 லட்சமாகும். இந்த தொகை திருப்பி தரப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விரு அணிகளை விற்பதன் மூலம் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு சுமார் ரூ.5 ஆயிரம் கோடி அளவுக்கு தொகை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு அணியின் அடிப்படை விலையே ரூ.2 ஆயிரம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதன் மூலம் அகமதாபாத், லக்னோ, புனே ஆகிய நகரங்களை அடிப்படையாக கொண்டு அணிகள் உருவாக்கப்படும் என்று தெரிகிறது. அதானி குழுமம், ஆர்.பி.ஜி. சஞ்ஜீவ் கோயங்கா குரூப், மருந்து கம்பெனியான டோரென்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் ஐ.பி.எல். அணிகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றன. 10 அணிகள் இடம் பெறும் போது ஆட்டங்களின் எண்ணிக்கை 60-ல் இருந்து 74 ஆக அதிகரிக்கும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com