முத்தரப்பு டி20 போட்டியில் இந்திய அணி, பங்களாதேஷை வென்றதை அடுத்து ரசிகர்கள் பாம்பு நடனத்தையும் பங்களாதேஷ் வீரர்களையும் ஒப்பிட்டு மீம்ஸ் உருவாக்கி கலாய்த்து வருகின்றனர். இந்த மீம்ஸ்கள் வைரலாகி வருகிறது.
இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் அணிகள் இடையேயான டி20 கிரிக்கெட் போட்டி கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்து வந்தது. லீக் சுற்று முடிவில் இந்தியாவும், பங்களாதேஷூம் ஃபைனலுக்கு முன்னேறின. இந்த அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி, பங்களாதேஷை பேட்டிங் செய்யப் பணித்தது. அந்த அணி, 8 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் சபீர் ரகுமான் அதிகப்பட்சமாக 77 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் சேஹல் 3 விக்கெட்டும், உனட்கட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் ஆடிய இந்திய அணி, கடைசிக்கட்டத்தில் தடுமாறியது. போட்டி கைவிட்டுப் போய்விடும் என்ற நிலையில், தினேஷ் கார்த்திக் அதிரடியாக விளையாடி இந்திய அணியை வெற்றிபெற வைத்தார். அவர் 8 பந்தில் 29 ரன்கள் குவித்து அசத்தினார். இதையடுத்து இந்திய அணி திரில் வெற்றி பெற்றது.
இந்த தொடரில் இலங்கைக்கு எதிரான போட்டியில் விளையாடிய போது பங்களாதேஷ் விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிம், பாம்பு நடனம் ஆடினார். இது வைரலானது. இதைப் பின்பற்றிய பங்களாதேஷ் ரசிகர்கள், சிக்சர் அடித்தாலோ, பவுண்டரி அடித்தாலோ, பாம்பு நடனத்தை ஆடத் தொடங்கினர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இலங்கை வீரர்கள், விக்கெட் வீழ்ந்தால் மகுடி போல் ஊதத் தொடங்கினர். ரணகளமான போட்டிக்கு நடுவில் இந்த சுவராஸ்யங்களும் ரசிக்க வைத்தன.
பாம்பு நடனம் சமூக வலைத்தளங்கள் மட்டுமின்றி வர்ணனை செய்துகொண்டிருந்த கவாஸ்கர் வரை ஈர்த்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் அவரும் பாம்பு நடனம் ஆடினார்.
இதற்கிடையே இலங்கை வீரர்களுடன் பங்களாதேஷ் வீரர்கள் மோதலில் ஈடுபட்டதை அடுத்து இலங்கை ரசிகர்கள் கடுப்பில் இருந்தனர். அவர்கள், நேற்று இந்திய அணிக்கு ஆதரவளித்து பாம்பு நடனத்தை கிண்டலடித்தனர்.
நேற்று தினேஷ் கார்த்திக் களத்தில் இறங்கும் வரை பங்களாதேஷ் வீரர்கள் அடிக்கடி பாம்பு நடனம் ஆடி மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொண்டிருந்தனர். ஆனால், வெற்றியை அவர் தன் பக்கம் இழுத்ததை அடுத்து, பாம்பு அவரது மகுடிக்கு அடங்கிவிட்டது.
இதை வைத்து சமூக வலைத்தளங்களில் ஏராளமான மீம்ஸ்களை உருவாக்கி கலாய்த்து வருகின்றனர்.
அவற்றில் சில இங்கே: