இந்திய அணிக்கு எதிரான முதல் 50 ஓவர் போட்டியில், இங்கிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
கொரோனா காரணமாக கடந்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட கடைசி மற்றும் 5-வது டெஸ்ட் போட்டி, 3 டி20, 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்பதற்காக, இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் கொரோனா காரணமாக கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து கேப்டன் ரோகித் சர்மா விலகியநிலையில், கேப்டனாக நியமிக்கப்பட்டார் பும்ரா. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்சில் நன்றாக விளையாடிய இந்திய அணி, இரண்டாவது இன்னிங்சில் மோசமான ஆட்டத்தால் வெற்றிவாய்ப்பை இழந்தது. இதனால் டெஸ்ட் போட்டி சமனில் முடிந்தன.
இதையடுத்து நடந்த டி20 போட்டியில் ரோகித் சர்மா கேப்டனாக மீண்டும் அணிக்கு திரும்பியநிலையில், 2-1 என்ற கணக்கில் போட்டியை கைப்பற்றியது இந்திய அணி. இதனைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், முதல் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் துவங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து பேர்ஸ்டோ, ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ் போன்ற பலமிக்க வீரர்களுடன் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி களமிறங்கியது.
ஆனால் அந்த அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஜேசன் ராய் மற்றும் ஜானி பேர்ஸ்டோ துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். முதல் ஓவரை வலது கை வேகப்பந்து வீச்சாளாரான முகமது ஷமி வீசினார். அவரது ஓவரில் ரன் ஏதும் பெரிதாக அடிக்க முடியாமல், இங்கிலாந்து வீரர்கள் தடுமாறினர். இதையடுத்து 2-வது ஓவரை மற்றொரு வேகப்பந்து வீச்சாளாரான பும்ரா வீச வந்தார்.
அப்போது 1.4-வது ஓவரில் ஜேசன் ராய் ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட்டாகி பெவிலியனுக்கு நடையை கட்டினார். இதையடுத்து ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோவுடன் ஜோடி சேர்ந்தார். ஆனால், வந்த வேகத்திலேயே 2 பந்துகளை மட்டும் சந்தித்து அவரும், பும்ரா பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்திடம் கேட்ச் கொடுத்து டக் அவுட்டாகி நடையை கட்டினார். இதனைத் தொடர்ந்து பென் ஸ்டோக்ஸ் 4-வது வீரராக களமிறங்கினார்.
முகமது ஷமி 3-வது ஓவரை வீச வந்தநிலையில், தான் சந்தித்த முதல் பந்திலேயே பென் ஸ்டோக்ஸும், ரிஷப் பந்திடம் கேட்ச் கொடுத்து டக் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். இங்கிலாந்து அணி 5 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை, அதுவும் சீனியர் வீரர்களை இழந்து தடுமாறியது. இதன்பிறகு பேர்ஸ்டோவுடன் ஜோடி சேர்ந்தார் கேப்டன் ஜோஸ் பட்லர். ஆனால், 5.3 ஓவரில் 7 ரன்களை எடுத்த நிலையில், மீண்டும் பும்ரா பந்துவீச்சில், ரிஷப் பந்திடம் கேட்ச் கொடுத்து பேர்ஸ்டோ நடையைக் கட்டினார்.
4 விக்கெட்டுகளை இழந்தநிலையில், கேப்டன் ஜோஸ் பட்லருடன் லியம் லிவிங்ஸ்டன் ஜோடி சேர்ந்தார். அப்போது அதிரடி ஆட்டத்தை ஜோஸ் பட்லர் வெளிப்படுத்தி வந்தநிலையில், பும்ரா பந்துவீச்சில் லியம் லிவிங்ஸ்டன் டக் அவுட்டாகி வெளியேறினார். பவர் பிளேயில் இந்திய அணி வீரர்களின் பந்துவீச்சால், இங்கிலாந்து அணி 30 ரன்கள் மட்டுமே எடுத்து, 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 13.5-வது ஓவரில் பிரசித் கிருஷ்ணா பந்து வீச்சில், மொயின் அலி 14 ரன்களில் அவுட்டாகி நடையைக் கட்டினார்.
இதனைத் தொடர்ந்து, 6 பவுண்டரிகளுடன் 30 ரன்களை எடுத்தநிலையில் ஷமி பந்து வீச்சில் சூர்யா குமார் யாதவிடம் கேட்ச்சை பறிகொடுத்து ஜோஸ் பட்லரும் 14.3-வது ஓவரில் வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். பின்னர் கிறிஸ் ஓவர்டன், 16.3-வது ஓவரில் 8 ரன்களுடன் ஷமி பந்து வீச்சில் வெளியேறினார். 17 ஓவர்கள் முடிந்தபோது இங்கிலாந்து அணி 8 விகெட் இழப்பிற்கு 68 ரன்களே எடுத்திருந்தது.
68 ரன்களுக்கு 8 விக்கெட் வீழ்ந்துவிட்ட நிலையில், இங்கிலாந்து அணி அடுத்த சில ரன்களுக்குள் ஆல் ஆகிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. டேவிட் வில்லெ, பிரைடன் கார்ஸ் சற்று நேரம் தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை 100 வரை கொண்டு சென்றது. மீண்டும் இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சி கொடுத்தார் பும்ரா. கார்ஸை க்ளீன் போல்ட் ஆக்கினார். அத்துடன் கடைசி விக்கெட்டையும் அவரே சாய்த்தார். இங்கிலாந்து அணி 110 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பும்ரா 7.2 ஓவர்களில் வெறும் 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை சாய்த்தார். இதில் 4 விக்கெட்டுகள் க்ளீன் போல்ட்.
ஷமி 7 ஓவர்களில் 31 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 30(32), டேவி வில்லே 21(26) ரன்கள் எடுத்தனர். இந்திய அணி 111 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.