ஜூனியர் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை ஊக்குவிக்கும் விதமாக கேரளா மாநிலம் முழுவதும் ஒரு மில்லியன் கோல்கள் போட்டு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
17வது ஜூனியர் உலகக்கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவின் கொல்கத்தா, மும்பை, கொச்சி உள்ளிட்ட ஆறு நகரங்களில் நடக்கிறது. உலகம் முழுவதும் இருந்து 24 அணிகள் இதில் பங்கேற்கின்றன. 17 வயதிற்கு உட்பட்டோருக்கான இந்த போட்டிகள் கேரளாவின் கோசி நேரு விளையாட்டு அரங்கிலும் நடப்பது கேரள கால்பந்து ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது. அதை வெளிப்படுத்தும் விதமாகவும், கால்பந்து விளையாட்டு போட்டிகளை ஊக்குவிக்கும் நோக்கிலும், கேரள மாநிலத்தில் ஒரு மில்லியன் கோல்கள் போட்டு, போட்டிகளை வரவேற்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
கேரளா மாநிலம் முழுவதும் உள்ள ஊராட்சிகள், பள்ளி கல்லூரிகள் என ஒவ்வொன்றிலும் தலா இரண்டாயிரம் கோல்கள் போட்டு வரவேற்பு அளித்தனர். அதைத்தொடர்ந்து இடுக்கி மாவட்டம் குமுளி பொது மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில், அனைத்து தரப்பினரும் ஆர்வத்துடன் ஆளுக்கு ஒரு கோல் வீதம் இரண்டாயிரம் கோல்கள் போட்டு, ஜூனியர் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை வரவேற்றனர். இவ்வாறாக மாநிலம் முழுவதும் ஒரு மில்லியன் கோல்கள் போட்ட நிகழ்வை கின்னஸ் சாதனை பட்டியலிலும் இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.