பி.டி உஷாவை பின்னுக்கு தள்ளிய திருச்சி வீராங்கனை - நெகிழ்ச்சியில் தனலட்சுமியின் தாய்

பி.டி உஷாவை பின்னுக்கு தள்ளிய திருச்சி வீராங்கனை - நெகிழ்ச்சியில் தனலட்சுமியின் தாய்
பி.டி உஷாவை பின்னுக்கு தள்ளிய திருச்சி வீராங்கனை - நெகிழ்ச்சியில் தனலட்சுமியின் தாய்
Published on

வீடு முழுவதும் நிறைந்திருக்கும் பதக்கங்களும், பரிசுகளும் தனலட்சுமியின் சாதனையை வீட்டிற்குள் நுழையும்போதே நமக்கு எடுத்துச் சொல்லும். திருச்சி விமான நிலையம் அருகே குண்டூர் பகுதியைச் சேர்ந்தவர் தனலட்சுமி. இவர் திருச்சி சீதாலட்சுமி ராமசாமி கல்லூரியில் படித்தவர். அப்போது பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான போட்டிகளில் பல்வேறு சாதனை புரிந்தவர். தற்போது தேசிய அளவிலான போட்டியில் தனி சாதனை படைத்து, சர்வதேச போட்டிகளில் பங்கெடுக்க தகுதி பெற்றுள்ளார்.

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் கடந்த 15-ம் தேதி தொடங்கி தேசிய தடகளப்போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியில் தமிழ்நாட்டு அணியில் திருச்சியில் இருந்து மட்டும் 20 பேர் பங்கேற்றனர். இந்த தேசிய தடகளப் போட்டியில் திருச்சியைச் சேர்ந்த வீரர், வீராங்கனை சாதனை புரிந்துள்ளனர். அதில், பெண்கள் பிரிவில் திருச்சியைச் சேர்ந்த தனலட்சுமி 100 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் தங்கம் வென்றுள்ளார். இவர், 100 மீட்டர் தூரத்தை 11.39 வினாடிகளில் கடந்துள்ளார். குறிப்பாக, சர்வதேச வீராங்கனை டூட்டி சந்த், ஹீமா தாஸ் ஆகியோரை பின்னுக்கு தள்ளி திருச்சி வீராங்கனை தனலட்சுமி சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் பி.டி.உஷாவின் சாதனையையும் முறியடித்துள்ளார். இன்று இரவு 9.30 மணிக்கு ரயில் மூலம் தனலட்சுமி திருச்சி வருகிறார்.

இதுகுறித்து தனலட்சுமியின் தாய் உஷா கூறுகையில், “தனலட்சுமி 10 வயது முதலே ஓட்டப்பந்தயத்தில் ஆர்வம் கொண்டு பல்வேறு பரிசுகளை பெற்றுள்ளார். அவர் தந்தை உயிருடன் இருந்தபோது கையில் கடிகாரத்தை வைத்துக்கொண்டு மகளோடு நின்று, ஓட்ட நேரத்தை குறித்து சொல்வார். தற்போது அவர் இல்லை என்றாலும் அவள் பெற்ற வெற்றி, தாங்கள் பட்ட கஷ்டத்திற்கு எல்லாம் ஆறுதலாக இருக்கிறது” என கண் கலங்குகினார்.

மேலும், “ஆடு, மாடு வளர்த்து வீடு வீடாக சென்று பால் விற்று வீட்டு வேலை செய்து அதன் மூலம் வரும் வருமானத்தை வைத்தும், சிலரின் உதவி மூலமும் கடும் சிரமங்களுக்கு மத்தியில் sports shoe வாங்கி தந்தேன். கணவரின் மறைவுக்குப் பின் மூன்று பெண் குழந்தைகளை வைத்துக் கொண்டு சிரமப்பட்ட எனக்கு, மகளின் வெற்றி மன மகிழ்ச்சியை தருகிறது.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற முதலமைச்சரின் கோப்பைக்கான தடகளப் போட்டியில் தனலட்சுமி பரிசு பெற்றுள்ளார். கொரோனா காரணமாக பரிசுத் தொகை ஒரு லட்சம் ரூபாய் இன்னும் வழங்கப்படாமல் உள்ளது. விரைவில் வழங்கி விடுவோம் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கையில் இருந்த நகைகளை எல்லாம் அடகு வைத்துவிட்டு வட்டிக்கு வட்டி கட்டி வருகிறோம். விளையாட்டுப் போட்டிகளில் ஒலிம்பிக் வரை சென்று தங்க பதக்கம் வெல்ல வேண்டும் என்ற என் மகளின் ஆசை நிறைவேறுவதற்கு அரசு ஏதேனும் ஒரு அரசு பணி கொடுத்து வாழ்வாதாரத்தை காக்க வழிவகை செய்ய வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.

- திருச்சி பிருந்தா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com