இந்திய விளையாட்டு உலகின் மிகப்பெரிய சர்ச்சையானது நடப்பாண்டில் அரங்கேறியது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் (WFI) தலைவராக இருந்த பிரிஜ் பூஷன் சரண் சிங், ஒரு மைனர் உட்பட 7 மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனடிப்படையில் பிரிஜ் பூஷன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், அவரை பதிவியிலிருந்து நீக்கி புதிய தலைவர் நியமிக்கப்பட வேண்டும் எனவும் வலுயுறுத்தி வினேஷ் போகத், சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா மற்றும் ரவி தஹியா முதலிய வீரர்கள் போராட்டத்தில் இறங்கினர்.
புது டெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் ஜனவரி மாதம் முதல் தொடர் போராட்டம் நடத்தினர். ஆனால் எவ்வளவு போராட்டம் நடத்தியும் பிரிஜ் பூஷன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், நாட்டிற்காக தாங்கள் பெற்ற பதக்கங்களை கங்கை ஆற்றில் வீச முடிவுசெய்தனர் வீராங்கனைகள். வீரர்களின் இந்த முடிவுக்கு பிறகு விசாரணைகள் மேற்கொள்ளப்படும், புதிய தேர்தலில் தலைவர் பதவிக்கு நான் போட்டியிட மாட்டேன் என பிரிஜ் பூஷன் தெரிவித்தார். ஆனால் அவர் மீது எந்தவிதமான சட்டநடவடிக்கையும் எடுக்கப்படாததால் வீராங்கனைகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3 மாதங்களுக்கு பிறகு உச்சநீதிமன்ற தலையிட்டதன் பேரில், பிரிஜ் பூஷன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணையானது நடத்தப்பட்டது. தொடர்ந்து உலக கால்பந்து கூட்டமைப்பும் இந்தியாவில் நடப்பதை பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம் என அறிக்கைவெளியிட்டது. அதன்பின் ஜீன் 15ம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விசாரணையை காவல்துறையினர் தொடர்ந்தனர். இந்நிலையில் டிசம்பர் மாதம் 21ஆம் தேதி புதிய இந்திய மல்யுத்த சம்மேளத்தின் தலைவருக்கான தேர்தல் நடத்தப்பட்டது. அதில் பிரிஜ் பூஷன் சிங்கின் ஆதரவாளர் சஞ்சய் சிங் தலைவராக தேர்வுசெய்யப்பட்டதால் வீரர்கள் விரக்தியின் உச்சிக்கே சென்றனர். இதனால் வேதனையடைந்த சாக்ஷி மாலிக் மல்யுத்தத்தை விட்டே விலகுவதாக அறிவித்தார்.
மேலும் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றவரான பத்மஸ்ரீ பஜ்ரங் புனியா, தான் பெற்ற பத்மஸ்ரீ விருதை திருப்பியளித்து வெறுப்பை வெளிப்படுத்தினார். தொடர்ந்து வினேஷ் போகத், வீரேந்தர் சிங் உள்ளிட்ட வீரர்கள் மத்திய அரசு தமக்களித்த விருதுகளைத் திருப்பியளிப்பதாக அறிவித்தனர்.
ஸ்பானிஷ் கால்பந்து லீக் போட்டியில் கருப்பாக இருக்கும் ரியல் மேட்ரிட் அணி வீரர் வினிசியஸ் ஜூனியரை ”கருப்பு குரங்கு” எனக்கூறி வலென்சியா ரசிகர்கள் இனவெறி தாக்குதல் நடத்தினர். தொடர்ச்சியாக 10முறை தாக்குதல் நடத்தப்பட்ட பிறகு பூதாகரமாக வெடித்தது. தொடர்ந்த கண்டனங்களுக்கு பிறகு பிரேசில் அதிபர் இதில் தலையிட்டதால் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.
கடந்த மே மாதம் ஸ்பானிஷ் கால்பந்து லீக்கான லா லிகா தொடரில், ரியல் மாட்ரிட் மற்றும் வலென்சியா அணிகளுக்கிடையேயான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பிரேசில் முன்கள வீரரான வினிசியஸ் ஜூனியர் மீது, வலென்சியா ரசிகர்கள் “கருப்பு குரங்கு” என இனவெறியை வெளிப்படுத்தும் வகையில் கூச்சலிட்டனர். இதனால் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. அதற்கு பின்னர் வினிசியஸ் போட்டியில் தொடர்ந்து விளையாட விருப்பம் தெரிவிக்கவில்லை. ஆனால் அவருடைய அணியின் பயிற்சியாளர் கார்லோ அன்செலோட்டி வேண்டுகோளுக்கு இணங்க தொடர்ந்து விளையாடினார்.
களத்திலும் இந்தவிவகாரம் முற்றிய நிலையில் வலென்சியா வீரர்களுக்கும், வினிசியஸுக்கும் மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் மோதலில் வினிசியஸுக்கு மட்டும் வேண்டுமென்றே ரெட்கார்ட் கொடுக்கப்பட்டு அவர் வெளியேற்றப்பட்டார். நடுவரின் இந்த செயல்பாடானது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. களத்திலிருந்து வெளியேறிய வினிசியஸ் ரெட் கார்டு கொடுக்கப்பட்டதை “இனவெறி தாக்குதலின் உச்சம்” என்று குற்றஞ்சாட்டினார். லீக் நடத்தும் அதிகாரிகள் மீதும், ஆதரவாளர்கள் மீதும் கடுமையான விமர்சனத்தை வைத்த வினிசியஸ், தன்னுடைய டிவிட்டர் பதிவில், ”ஒரு காலத்தில் ரொனால்டினோ, ரொனால்டோ, கிறிஸ்டியானோ மற்றும் மெஸ்ஸி போன்ற ஜாம்பவான்களுக்கு சொந்தமான சாம்பியன்ஷிப், இப்போது இனவெறியர்களுக்கு சொந்தமாக மாறிவிட்டது. இது கால்பந்து போட்டியாக ஒருபோதும் இருக்க முடியாது" என எமோசனலாக பதிவிட்டார்.
இந்தவிவகாரத்தில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் லா லிகா மௌனம் சாதித்தது. இதனால் விரக்தியடைந்த முன்னாள் கால்பந்துவீரரகள் வினிசியஸுக்கு ஆதரவு குரல் எழுப்பினர். நட்சத்திர வீரர் இம்பாப்வே, ரியோ பெர்டினாண்ட் மற்றும் ஃபார்முலா ஒன் வீரர் லூயிஸ் ஹாமில்டன் முதலிய வீரர்கள் கண்டனங்கள் எழுப்பிய நிலையில், FIFA-ம் கண்டனத்தை எழுப்பியது. உடன் பிரேசில் அதிபர், “21 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் வாழ்ந்துகொண்டிருக்கும் போதும் இனவெறி ரீதியிலான தாக்குதல்கள் நடைபெறவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கால்பந்து மைதானங்களில் பாசிசம் மற்றும் இனவெறி ஆதிக்கங்கள் உயிர்த்தெழ அனுமதிக்க கூடாது” என கண்டனம் தெரிவித்த நிலையில் விவகாரம் சூடுபிடித்தது.
பின்னர் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்ட நிலையில் 7 பேர் கைதுசெய்யப்பட்டு, 6 போட்டி அதிகாரிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.
2023ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் ’Timed out’ விக்கெட் மூலம் மேத்யூஸை வெளியேற்றிய வங்கதேச வீரர் ஷாகிப் அல் ஹசன் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் திரும்பி பார்க்கவைத்தார்.
நவம்பர் 6ம் தேதி உலகக்கோப்பை தொடரின் 38வது லீக் போட்டியில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் மோதின. இந்த போட்டியில் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. 24.2 ஓவர்களில் இலங்கை அணி 135 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்திருந்தது. கடைசியாக சதீரா சமரவிக்ரமா விக்கெட்டை இழந்திருந்தார். அவருக்குப் பின் ஏஞ்சலோ மேத்யூஸ் களம் இறங்க வேண்டும். அப்போது மேத்யூஸ் களத்திற்கு வருவதற்கு காலதாமதம் செய்ததால் வங்கதேச கேப்டன் ஷாகிப் அல் ஹசன் அம்பயரிடம் அவுட் வழங்குமாறு அப்பீல் செய்தார். அங்கு நடப்பது மேத்யூஸுக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களுக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
ஐசிசி விதிமுறையின் படி, “ஒரு விக்கெட் விழுந்த பிறகு புதிதாக களமிறங்கும் அல்லது ஏற்கெனவே களத்தில் உள்ள வீரர், அடுத்த 2 நிமிடத்திற்குள் ஸ்டிரைக்கிற்கு வந்து அடுத்த பந்தை எதிர்கொள்ள வேண்டும். அப்படி பந்தை சந்திக்காமல் கால தாமதம் செய்தால் அந்த வீரருக்கு “TimedOut" விதியின் மூலம் அவுட் கொடுத்து வெளியேற்றலாம்”. இந்த விதியின் படி ஷாகிப் அவுட் கேட்க, அம்பயர்கள் பந்தையே சந்திக்காத மேத்யூஸுக்கு அவுட்கொடுத்து வெளியேற்றினர்.
அம்பயர்களிடம் சென்று மேத்யூஸ் வாக்குவாதம் செய்ய வங்கதேச கேப்டன் ஷாகிப் ஒப்புக்கொண்டால் நீங்கள் பேட்டிங் செய்யலாம் என கூறினர். ஆனால் மேத்யூஸ் எவ்வளவோ ஷாகிப்பிடம் சென்று பேசியும் ஷாகிப் விக்கெட்டுக்கு சென்றதால், மேத்யூஸ் சோக முகத்துடன் அவுட்டாகி நடையை கட்டினார்.
இதில் வேடிக்கை என்னவென்றால் மேத்யூஸ் 2 நிமிடத்திற்குள் களத்திற்கு வந்துவிட்டார். அவருடைய ஹெல்மெட் ஸ்டிரிப் பழுதாகி இருந்ததால் மாற்று ஹெல்மெட் எடுத்துவருமாறு பெவிலியனில் இருக்கும் வீரர்களை அழைத்து மாற்றிக்கொண்டிருந்தார். ஆனால் அதை எதிரணி கேப்டனிடமோ அல்லது அம்பயரிடமோ அவர் கேட்காமல் சென்றதால் அவுட் வழங்கப்பட்டது. இருப்பினும் ஷாகிப்பின் செயலை பெரும்பாலான தரப்பினர் விமர்சனம் செய்தனர். இந்த சம்பவத்திற்கு பிறகு “TimedOut" விக்கெட் மீதும் வீரர்கள் அதிக கவனம் செலுத்திவருகின்றனர்.
நடந்துமுடிந்த 2023 FIFA பெண்கள் கால்பந்து உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் ஸ்பெய்ன் மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சிறப்பாக விளையாடிய ஸ்பெய்ன் பெண்கள் தேசிய கால்பந்து அணி இங்கிலாந்தை 1-0 என வீழ்த்தி கோப்பையை தட்டிச்சென்றது. முதல் முறையாக உலகக் கோப்பையை வென்ற ஸ்பெய்ன் அணி, ஜெர்மனிக்குப் பிறகு ஆண்கள் மற்றும் பெண்கள் FIFA உலகக் கோப்பைகளை வென்ற இரண்டாவது நாடு என்ற பெருமையைப் பெற்றது.
இந்நிலையில் வெற்றிக்கொண்டாட்டத்தில் இருந்த ஸ்பெய்ன் அணியில் சிறிது நேரத்திலே சர்ச்சை கிளம்பியது. உலகக்கோப்பையை வென்ற பிறகு கொண்டாட்டத்தை வெளிப்படுத்திய ஸ்பெய்ன் கால்பந்து சம்மேளனத்தில் தலைவர் லூயிஸ் ரூபியேல்ஸ், ஸ்பெய்ன் அணியின் நட்சத்திர வீராங்கனையான ஜென்னி ஹெர்மோசோவின் உதடுகளில் முத்தமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். ஆனால் முன் அனுமதியின்றி முத்தமிட்டதாக கூறி ஜென்னி அவர் மீது பாலியல் துன்புறுத்தல் கீழ் வழக்கு தொடர்ந்தார்.
ஆனால் 46 வயதான லூயிஸ் ரூபியேல்ஸ் தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை மறுத்து “அவர் ஒப்புக்கொண்டதால் தான் நான் முத்தமிட்டேன்” என கூற விவகாரம் பூதாகரமாக வெடித்தது. பின்னர் அவர் மீது நடவடிக்கை எடுக்கும்வரை போட்டியில் பங்கேற்க போவதில்லை என மற்றவீராங்கனைகள் அனைவரும் கூட்டாக அறிக்கை வெளியிட, அவர்மீது நடவடிக்கை எடுக்க ஸ்பெய்ன் கால்பந்து சங்கம் மறுப்பு தெரிவித்தது. பின்னர் ஸ்பெய்ன் துணை அதிபர் தலையிட்டதன் பேரில் வழக்கு தொடரப்பட்டது. தொடர் கண்டனங்களால் தானாகவே தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் ரூபியேல்ஸ்.
FIFA கூட்டமைப்பு அவருக்கு 3 ஆண்டுகள் எந்த பதவியிலும் பங்கேற்க முடியாத அளவு தடைவிதித்து உத்தரவிட்டது.
2023 ஐபிஎல் தொடரின் 43-வது லீக் ஆட்டம் LSG மற்றும் RCB அணிகளுக்கு இடையே, லக்னோ நகரில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் லக்னோ அணியை வீழ்த்தி பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த பரபரப்பான போட்டியின் இடையில் வீரர்களிடையே ஏற்பட்ட மோதலானது பெரிய சர்ச்சை விவகாரமாக மாறியது. போட்டியின் இடையே லக்னோ அணி வீரரான நவீன் உல் ஹக்கிற்கும், ஆர்சிபி அணியின் விராட் கோலிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கோலி பேட்டிங் செய்த நவீனை பார்த்து ஆக்ரோசமாக கத்த, அதற்கு நவீன் பதிலளிக்கவென மைதானத்தில் மோதல் தீ பற்றியது. கோலி தன்னுடைய கால் ஷூவை காட்டி பேசியதாக நவீன் உல் ஹக் குற்றஞ்சாட்டினார்.
போட்டி முடிந்த பிறகு வீரர்கள் கைக்குலுக்கும் போதும் நவீன் மற்றும் கோலியிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது லக்னோ அணியின் ஆலோசகராக இருந்த கவுதம் கம்பீர் இந்த விவகாரத்தில் தலையிட மோதல் தீவிரமானது. கம்பீர் மற்றும் கோலி இருவருக்கும் இடையே நீண்டநேரம் வார்த்தைப்போர் நடைபெற்றது. பின்னர் கோலியை தனியாக அழைத்துச்சென்ற கேஎல் ராகுல் சமாதானம் செய்து அனுப்பி வைத்தார். இரண்டு நட்சத்திர வீரர்களுக்கு இடையேயான மோதலானது சோஷியல் மீடியாவில் பூதாகரமாக வெடித்தது.
விராட் கோலியின் ரசிகர்கள் நவின் உல் ஹக்கை கடுமையாக விமர்சனம் செய்ய ஆரம்பித்தனர். ஆனால் தொடர்ந்து கோலி குறித்த சர்ச்சை பதிவுகளை பதிவிட்ட நவீன் உல் ஹக் இந்த விவகாரத்தை முடிக்காமல் நீட்டித்துகொண்டே இருந்தார். ஆர்சிபி அணி தோல்வியின் போது அவர் பதிவிட்ட “மாம்பழம்” பதிவு மீண்டும் சர்ச்சையானது.
இந்நிலையில் போட்டியின் போது மிகவும் மோசமாக சண்டையிட்டதை அடுத்து, கௌதம் கம்பீர் மற்றும் விராட் கோலிக்கு போட்டியின் ஊதியத்தில் இருந்து 100 சதவிகிதம் அபராதமும், நவீன்-உல்-ஹக்கிற்கு 50 சதவிகிதம் அபராதமும் விதித்து பிசிசிஐ உத்தரவிட்டது.