மில்லரின் டாப் 5 “கில்லர்” சம்பவங்கள்! #HappyBirthdayMiller

மில்லரின் டாப் 5 “கில்லர்” சம்பவங்கள்! #HappyBirthdayMiller
மில்லரின் டாப் 5 “கில்லர்” சம்பவங்கள்! #HappyBirthdayMiller
Published on

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரரான டேவிட் மில்லர் தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் “கில்லர் மில்லர்” என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர். தோல்வியின் விளிம்பில் அணி இருக்கும்போதும் தனியாளாக வெற்றியை நோக்கி தனது அணியை நகர்த்திச் செல்வது மில்லரின் தனி பாணியாகும். இன்று பிறந்தநாள் காணும் அந்த அதிரடி நாயகனுக்கு 33 வயது ஆகிறது.

இதுவரை 105 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி உள்ள மில்லர் 12 அரைசதங்கள், ஒரு சதம் விளாசி ஒட்டுமொத்தமாக 2,455 ரன்களை குவித்துள்ளார். சர்வதேசப் போட்டிகளிலும் மில்லர் ஜொலிக்க தவறவில்லை. ஒருநாள் போட்டிகளில் 3,503 ரன்களையும், டி20 போட்டிகளில் 1,850 ரன்களையும் குவித்து அசத்தியுள்ளார். மில்லர் கில்லராக உருவெடுத்த டாப் 5 சம்பவங்களை தற்பொது பார்ப்போம்.

5. 55 பந்துகளில் 89 ரன்கள் Vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (2015)

2015 இல், மில்லர் பஞ்சாப் அணிக்காக தனித்து போராடி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 55 பந்துகளில் 89 ரன்கள் எடுத்தார். இந்த போட்டியில் 9 சிக்ஸர்கள் விளாசி வானவேடிக்கை காட்டினார் மில்லர். ஆனால் ஹைதராபாத் ஆட்டத்தை 5 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதால் அவரது அபார ஆட்டம் வீணாகியது.

4. 31 பந்துகளில் 64* ரன்கள் Vs இந்தியா (2022)

நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்தியா நிர்ணயித்த 212 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்திய தென்னாப்பிரிக்கா சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து 81/3 என்ற நிலையில் தடுமாறியது. ஆனால் அப்போது இணை சேர்ந்த மில்லர் மற்றும் வான் டெர் டுசென் தடுமாற்றத்தில் இருந்து அணியை மீட்டனர். வான் டெர் டஸ்சென் தொடக்கத்தில் விளையாட முடியாமல் திணறியபோது, ரெட்-ஹாட் ஃபார்மில் இருந்த மில்லர் 31 பந்துகளில் 64* ரன்கள் எடுத்து இந்திய பந்துவீச்சாளர்களை திணறடித்தார். 4 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் விளாசி மில்லர் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி, தென்னாப்பிரிக்க அணியை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வழிவகுத்தார்.

3. 38 பந்துகளில் 101 ரன்கள் Vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (2013)

2013 ஆம் ஆண்டு பஞ்சாப் அணிக்காக விளையாடிய மில்லர் ஆர்சிபி அணிக்கு எதிராக 190 ரன்கள் இலக்கை துரத்தும்போது, ஒரு அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் மில்லர். வெறும் 38 பந்துகளில் சதம் விளாசி ஆர்சிபிக்கு கில்லராகி இருந்தார் மில்லர். 265 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடிய மில்லர் 8 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களை விளாசி பஞ்சாப் அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார்.

2. 51 பந்துகளில் 94 ரன்கள் Vs சென்னை சூப்பர் கிங்ஸ் (2022)

இந்த ஆண்டு ஐபிஎல் சீசனில், சிஎஸ்கேக்கு எதிராக 170 ரன்களை சேஸ் செய்யும் போது 48 ரன்களை எடுப்பதற்குல் 4 விக்கெட்டுகளை இழந்து தள்ளாடியது குஜராத் டைட்டன்ஸ். அடுத்து களமிறங்கிய மில்லர் 51 பந்தில் 94 ரன்களை விளாசி அசத்தினார். 8 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் அடங்கிய அவரது ஆட்டமிழக்காத இன்னிங்ஸ், தோல்வியை நெருங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற உதவியது.

1. 36 பந்துகளில் 101* ரன்கள் Vs வங்கதேசம் (2017)

வங்கதேசத்திற்கு எதிராக தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற டி20 போட்டி அது. ஓப்பனராக களமிறங்கி ஹசிம் ஆம்லா அதிரடியை கிளப்ப, மறுபக்கம் டேவிட் மில்லர் சிக்ஸர், பவுண்டரிகளாக விளாசி அம்லாவையே ஆச்சர்யப்படுத்தினார். ஆம்லா 51 பந்துகளில் 85 ரன்களை எடுத்து பொறுப்பாக விளையாட, வெறும் 36 பந்துகளில் 101 ரன்களை குவித்து மலைக்க வைத்தார் மில்லர். அவர் விளாசிய பவுண்டரிகள் - 7, சிக்ஸர்கள் - 9 ஆகும். விளைவி 20 ஓவர்கள் முடிவில் 224 ரன்களை குவித்தது. ஆனால் வங்கதேசம் 141 ரன்களுக்குள் ஆட்டமிழந்து தோல்வியடைந்தது. மில்லரின் இந்த கில்லர் சம்பவத்தால் 83 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை ருசித்தது தென்னாப்பிரிக்க அணி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com