பங்களாதேஷ் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கிடைத்து வருகிறது. முதல் போட்டியில் மோசமான தோல்வி அடைந்ததன் சோகமே இன்னும் சரி ஆகாத நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் மீண்டும் இந்திய அணியின் பந்துவீச்சு கோட்டைவிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
69/6 To 271/7..!
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பங்களாதேஷ் அணி 69 ரன்களுக்கு எல்லாம் 6 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அதனால், நிச்சயம் 100 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துவிடும் என்றே கருதப்பட்டது. ஆனால், பங்களாதேஷ் அணி 271 ரன்கள் குவித்து அசத்தியுள்ளது. 7வது விக்கெட்டுக்கு மெஹிடி ஹாசன் மிராஸ், மஹமதுல்லா ஆகியோர் 148 ரன்களுக்கு அமைத்த பார்ட்னர்ஷிப்தான் இந்திய அணிக்கு பேரிடியாக அமைந்துவிட்டது. பங்களாதேஷ் அணியின் முக்கிய வீரர்களான லிட்டன் தாஸ் 7, ஷகிப் அல் ஹசன் 8, முஷ்பிகூர் ரகிம் 12 ரன்களுக்கு ஆட்டமிழந்தபோதும், மஹ்முதுல்லா மற்றும் மெஹிடி ஹசன் மிராஸ் ஜோடி ஆட்டத்தை தங்களது தோளில் சுமந்து இறுதிவரை சென்றது.
8 விக்கெட்டுக்கு சதம் விளாசிய மெஹிடி!
69 ரன்களுக்கு பிறகு 217 ஆவது ரன்னில் தான் அடுத்த விக்கெட் வீழ்ந்தது. 96 பந்துகளை சந்தித்த மஸ்முதுல்லா 7 பவுண்டரிகளுடன் 77 ரன்கள் எடுத்தார். மெஹிடியோ இறுதிவரை களத்தில் நின்று அதிரடி ஆட்டத்தையும் வெளிபடுத்தி சதம் விளாசினார். அதுவும் ஆட்டத்தில் கடைசி பந்தில் அவர் சதம் விளாசிய அந்நாட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். 83 பந்துகளை சந்தித்த அவர் 4 சிக்ஸர், 8 பவுண்டரிகளை விளாசினார். 8 ஆவது விக்கெட்டுக்கு களமிறங்கி சதம் விளாசிய இரண்டாவது வீரர் என்ற பெருமையை அவர் அடைந்துள்ளார்.
கடைசி 5 ஓவரில் 68 ரன்கள்!
பங்களாதேஷ் அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து ரன்களை எடுக்க தடுமாறிய போதும், கடைசி நேரத்தில் பவுண்டரிகளும், சிக்ஸர்களுமாக பறந்தது. அதுவும் கடைசி 5 ஓவர்களில் 68 ரன்கள் விளாசி தள்ளினர். பந்துவீச்சாளரான நசும் அகமது 11 பந்துகளில் 18 ரன்கள் எடுத்தார். இதில் ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகள் அடங்கும்.
மீண்டும் சோதித்த இந்திய பவுலர்கள்!
தொடக்கத்தில் இந்திய அணியின் பந்துவீச்சு அபாரமாகவே இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் முற்றிலும் செயலிழந்து போனது. வாஷிங்டன் சுந்தர் 10 ஓவர்கள் வீசி 37 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் சாய்த்தார். உம்ரான் மாலிக், முகமது சிராஜ் ரன்களை வாரி வழங்கினர். சிராஜ் 73 ரன்களை வாரி வழங்கினார். உம்ரான் மாலின் 58 ரன்களை விட்டுக் கொடுத்தார். ஷர்துல் தாக்கூர் 10 ஓவர்களில் 47 ரன்கள் விட்டுக் கொடுத்தார். அக்ஸர் பட்டேல் 7 ஓவர்களில் 40 ரன்கள் விட்டுக் கொடுத்தார். தீபக் சாஹர் 3 ஓவர்களில் 12 ரன்கள் விட்டுக் கொடுத்தார்.
13 ரன்னில் 2 விக்கெட் இழந்த இந்திய அணி!
272 ரன்களை இலக்காக கொண்டு விளையாடி வரும் இந்திய அணிக்கு இரண்டாவது ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. விராட் கோலி 5 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். விராட் கோலியை தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான ஷிகர் தவான் 8 ரன்களில் கேட்ச் கொடுத்து நடையைக் கட்டினார். 13 ரன்களுக்குள் இந்திய அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்தது தடுமாறி வருகிறது.
பந்துவீச்சில்தான் சொதப்பியது என்றால் பேட்டிங்கிலும் மீண்டும் சொதப்பியுள்ளது. முதல் போட்டியிலும் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 186 ரன்கள் மட்டுமே எடுத்தது. கே.எல்.ராகுல் மட்டுமே 73 ரன்கள் எடுத்தார் மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். அந்தப்போட்டியிலும் 136 ரன்களுக்கு 9 விக்கெட் வீழ்ந்துவிட்ட நிலையில், கடைசி விக்கெட்டுக்கு 50 ரன்களுக்கு மேல் குவித்து பங்களாதேஷ் அணி வெற்றி பெற்றது. அந்த அளவிற்கு டெயில் எண்டில் இந்திய அணியின் பந்துவீச்சு இருந்தது.