டோக்கியோ பாராலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் 68.55 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து இந்திய வீரர் சுமித் அண்டில் புதிய உலகை சாதனை படைத்து, தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.
போட்டியின் முதல் சுற்றில் 66.95 மீட்டர்; 2வது சுற்றில் 68.08 மீட்டர்; 3வது சுற்றில் 65.27 மீட்டர்; 4 வது சுற்றில் 66.71 மீட்டர்; 5 வது சுற்றில் 68.55 என்றும் ஈட்டி எறிந்துள்ளார் சுமித்.
23 வயதாகும் சுமித் அண்டில் ஹரியானா மாநிலம் சோனிப்பட்டை சேர்ந்தவர். 2005ஆம் ஆண்டு நேரிட்ட பைக் விபத்தில் இடது முழங்காலுக்கு கீழ் உள்ள பகுதியை இழந்தவர். தற்போது 68.08 மீட்டர் ஈட்டி எறிந்ததன் மூலம், தங்கப்பதக்கத்தை உறுதி செய்து வென்றுள்ளார்.
முன்னதாக துபாயில் 2019ம் ஆண்டு நடந்த போட்டியில் 62.88 மீட்டர் தூரம் ஈட்டி எறியப்பட்டிருந்ததே உலக சாதனையாக இருந்துவந்தது. அதுவும், சுமித்தின் சாதனைதான். அந்தவகையில், தற்போது தன் சாதனையை தானே முறியடித்துள்ளார் சுமித் அண்டில்.
இவர் வென்றிருக்கும் தங்கம், பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைத்திருக்கும் இரண்டாவது தங்கப்பதக்கமாகும். முன்னதாக டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளில் துப்பாக்கிச்சுடுதலில் அவனி லெகாரா என்ற பெண், இன்று இந்தியாவிற்கு முதல் தங்கப்பதக்கம் வென்று தந்தார். மேலும் பாராலிம்பிக் வரலாற்றில் தங்கம் வெல்லும் முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் 19 வயதான அவனி லெகாரா படைத்தார்.