39 ஆண்டுகளுக்கு முன் இந்திய கிரிக்கெட் அணி பதித்த வரலாற்று முத்திரை அது... ஆம் இதே தேதியில் தான் இந்திய அணி முதன்முறையாக உலகக்கோப்பையை வென்றது...
வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் கிரிக்கெட்டில் கோலோச்சிக் கொண்டிருந்த காலகட்டம்... 1983 ஆம் ஆண்டு... கபில்தேவ் தலைமையிலான அணி உலகக்கோப்பை போட்டிக்காக இங்கிலாந்து பயணித்தது. இந்திய அணி கோப்பையைவெல்லும் என யாரும் நினைத்திருக்கவில்லை... கணிக்கவுமில்லை. ஆனால் அது நடந்தேறியது.
ஆச்சர்யமளிக்கும் வகையில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி இரு முறை நடப்புச் சாம்பியனான ஜாம்பவான்கள் நிறைந்த வெஸ்ட் இண்டீஸ் அணியை கோப்பைக்கான சவாலில் எதிர்கொண்டது. அந்த அற்புதம் நிகழ்ந்தது. நினைக்க நினைக்க சுவாரசியத்தை தூண்டும் காட்சிகள் அவை. சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியின் முத்திரை அழுத்தம் திருத்தமாக பதிய வைத்த அந்த இறுதிப் போட்டி இதே தேதியில் 1983 ஆம் ஆண்டு நடைபெற்றது.
55 ஓவர்களை கொண்ட போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 183 ரன்களே எடுத்தது. வழக்கமான அதிரடி ஆட்டத்தை காட்டிய தமிழகத்தை சேர்ந்த தொடக்க வீரர் ஸ்ரீகாந்த் 38 ரன்கள் எடுத்தார். சந்தீப் பாட்டீல் 27 ரன்கள் சேர்த்தார். உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் முதலில் ஆடிய அணி எடுத்த மிகக் குறைவான ஸ்கோர் அப்போது அதுதான்.
வெஸ்ட் இண்டீஸ் அணி எளிதில் வெற்றி இலக்கை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சீரான, சிறப்பான பந்துவீச்சால் வெஸ்ட் இண்டீஸ் அணியின் விக்கெட்டுகளை சாய்த்தனர் இந்திய பந்துவீச்சாளர்கள். 28 பந்துகளில் 33 ரன்கள் விளாசிய விவியன் ரிச்சர்ட்ஸ்-சின் விக்கெட்டை வீழ்த்தியது இந்திய அணிக்கு நம்பிக்கை கொடுத்தது.
வெஸ்ட் இண்டீஸ் அணி 140 ரன்களுக்கு சுருண்டது. மொஹிந்தர் அமர்நாத்தும், மதன் லாலும் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். வெஸ்ட்இண்டீஸின் வெற்றி ஓட்டத்திற்கு கபில்தேவ் தலைமையிலான படை முற்றுப்புள்ளி வைத்தது. கிரிக்கெட்டின் தாயகமான லார்ட்ஸ் மைதானத்தின் பால்கனியில் கபில்தேவ் கோப்பையை ஏந்தினார். கனவா ? நிஜமா ? என ரசிகர்கள் ஆனந்தக்கண்ணீர் சிந்தினர். வெற்றியை கொண்டாடிய சக வீரர்களுடன் தேசமே குதூகலித்தது.
ஆட்டநாயகன் விருதை வென்று அசத்தினார் மொஹிந்தர் அமர்நாத். இந்திய விளையாட்டுத்துறைக்கு சர்வதேச அளவில் சாதிக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தியது 1983 உலகக்கோப்பை கிரிக்கெட் என்றால் அது நிச்சயம் பொருந்தும்.