இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில், கிறிஸ் கெய்லின் அதிரடி ஆட்டத்தால் வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி பெற்றது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையே, 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டித் தொடர் நடந்து வந்தது. முதலாவது போட்டியில், இங்கிலாந்து அணியும் இரண்டாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் வெற்றி பெற்றன. மூன்றாவது போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டது.
நான்காவது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணி 418 ரன்கள் குவித்தது. இந்த இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 389 ரன் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.
இந்நிலையில் 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி, செயின்ட் லூசியாவில் நேற்று நடந்தது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி, வெஸ்ட் இண்டீஸின் வேகப்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 28.1 ஓவர்களில் 113 ரன்னில் சுருண்டது.
வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அந்த அணியின் மோசமான ஸ்கோர் இது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் தாமஸ் 5 விக்கெட்டுகளை அள்ளினார். ஹோல்டர், பிராத்வெயிட் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர் இந்த எளிய இலக்கை நோக்கி ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 12.1 ஓவரிலேயே 3 விக்கெட் இழப்புக்கு 115 ரன் எடுத்து வெற்றி பெற் றது. கிறிஸ் கெய்ல் அதிரடியாக ஆடி, 27 பந்தில் 77 ரன் எடுத்தார். இதில் 9 சிக்சர்களும் 5 பவுண்டரிகளும் அடங்கும்.
ஆட்ட நாயகன் விருது தாமஸூக்கும் தொடர் நாயகன் விருது கிறிஸ் கெய்லுக்கும் வழங்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் இந்த தொடர் 2-2 என்ற கணக்கில் முடிவுக்கு வந்தது.