இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. அதில் மூன்று பார்மெட்டிலும் இளம் வீரர் கே.எல்.ராகுல் விளையாட உள்ளார்.
அண்மையில் முடிந்த ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை கேப்டனாக வழிநடத்திய கே.எல்.ராகுல் 14 ஆட்டங்களில் 670 ரன்களை குவித்திருந்தார். கடந்த சீசனின் லீடிங் ரன் ஸ்கோரரும் அவர் தான்.
இந்நிலையில் ராகுலை விக்கெட்டை எப்படி வீழ்த்துவது என ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஆலோசித்துள்ளது. அந்த ஆலோசனையின் போது மேக்ஸ்வெல்லும் உடன் இருந்துள்ளார்.
ராகுலும், மேக்ஸ்வெல்லும் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடியவர்கள் என்பதால் அவரிடம் ஆஸ்திரேலிய அணி அதற்கான வழியை கேட்டுள்ளது.
“ராகுல் மிகச்சிறந்த வீரர். பிரெஷாரான சூழ்நிலையையும் சாந்தமாக கையாளுவார். அதை நான் பக்கத்தில் இருந்து பார்த்துள்ளேன். என்னிடம் அவரை வீழ்த்தும் வியூகம் குறித்து கேட்ட போது அதற்கான வழிகளை சொன்னேன். அவரது விக்கெட்டை ரன் அவுட் செய்து வீழ்த்தலாம் எனவும் சொல்லி இருந்தேன். இது அவரது விக்கெட்டை வீழ்த்துவதற்கான வழிகளில் ஒன்றாக சொல்லியிருந்தேன்” என cricket.com.au தளத்திடம் சொல்லியுள்ளார் மேக்ஸ்வெல்.
ராகுல் கடந்த நியூசிலாந்து தொடரில் சிறப்பாக விளையாடி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.