INDvsAUS: அறிமுகப் போட்டியிலேயே அசத்திய ஆஃப் ஸ்பின்னர்... யார் இந்த டாட் மர்பி?

INDvsAUS: அறிமுகப் போட்டியிலேயே அசத்திய ஆஃப் ஸ்பின்னர்... யார் இந்த டாட் மர்பி?
INDvsAUS: அறிமுகப் போட்டியிலேயே அசத்திய ஆஃப் ஸ்பின்னர்... யார் இந்த டாட் மர்பி?
Published on

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் அறிமுகமாகி 5 விக்கெட்களை வீழ்த்தியிருக்கிறார் ஆஸ்திரேலிய அணியின் இளம் சுழற்பந்துவீச்சாளர் டாட் மர்பி. யார் இவர்? இவர் கடந்து வந்த பாதை, இதோ!

நாக்பூர் முதல் டெஸ்ட்

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர்களில் விளையாட இருக்கிறது. இவ்விரு அணிகளுக்கான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நேற்று (பிப்ரவரி 9) நாக்பூரில் தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 177 ரன்கள் எடுத்தது. இதில் ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்களையும், தமிழக வீரர் ரவிச்சந்திர அஸ்வின் 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முற்றிலும் இந்த மைதானம் சுழல் பந்துவீச்சுக்குச் சாதகமாக அமைந்திருந்தது. அது, இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்தியாவின் பேட்டிங் போதும் எதிரொலித்தது. நேற்றைய (முதல்) நாள் முடிவில் இந்திய அணி 24 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 77 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் ரோகித் சர்மா ஆட்டமிழக்காமல் 69 ரன்களுடனும், அஸ்வின் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

ரோகித் சர்மா 9வது சதம்

பின்னர் இன்று காலை தொடங்கிய ஆட்டத்தில் அஸ்வின் 23 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து பின் களமிறங்கிய புஜாரா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், பரத் ஆகியோர் பொறுப்பின்றி சொற்ப ரன்களிலேயே விக்கெட்டை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினர். அதேநேரம் மறுபுறம் நிலைத்து நின்ற ரோகித் சர்மா, டெஸ்ட் கிரிக்கெட்டில் 9வது சதம் அடித்தார். 120 ரன்கள் எடுத்த நிலையில், ரோகித் சர்மா கம்மின்ஸ் பந்தில் வீழ்ந்தார். அவருக்குத் துணையாக நின்ற ரவீந்திர ஜடேஜா, தன் பங்குக்கு அரைசதம் அடித்தார்.

5 விக்கெட்களை வீழ்த்திய டாட் மர்பி

ஆஸ்திரேலிய அணியின் 5 முக்கிய விக்கெட்களை ஜடேஜா வீழ்த்தியதுபோல, இந்திய அணியின் 5 முக்கிய விக்கெட்களை டாட் மர்பி வீழ்த்தியுள்ளார்.

டாட் மர்பி பந்துவீச்சில் கே.எல்.ராகுல், அஸ்வின், புஜாரா, விராட் கோலி, பரத் ஆகியோர் வீழ்ந்துள்ளனர். நேற்று ராகுலை மட்டும் வீழ்த்திய மர்பி, இன்று 4 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்தார். அறிமுகப் போட்டியிலேயே ஆஸ்திரேலிய அணிக்காக ஆஃப் பிரேக் ஸ்பின்னர்களில் 5 விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் மர்பியும் இடம்பிடித்தார். இந்தப் பட்டியலில் பீட்டர் டெய்லர் (6 விக்கெட்), ஜாசன் கிரிஜா (8 விக்கெட்), நாதன் லயன் (5 விக்கெட்) ஆகியோருடன் டாட் மர்பி தற்போது இடம்பிடித்துள்ளார். தவிர, இந்தியாவுக்கு எதிராக அறிமுகமாகி முதல் போட்டியிலேயே 5 விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலிலும் மர்பி இடம்பிடித்துள்ளார்.

யார் இந்த டாட் மர்பி?

டாட் மர்பி, ஆஸ்திரேலியாவின் முர்ரே ஆற்றின் விக்டோரியா பகுதியில் உள்ள எச்சுகாவில், 2000ஆம் ஆண்டு நவம்பர் 15ஆம் தேதி பிறந்தவர். கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்ட அவர், தன்னுடைய 16 வயது வரை ஆஃப் ஸ்பின் பந்து வீசத் தொடங்கவில்லை. 16 வயதுக்குப் பிறகு கிரேக் ஹோவர்ட் என்பவரிடம் பயிற்சி பெறச் சென்றார், மர்பி. அவருடைய சுழல் திறனைக் கவனித்து அதன்படி மர்பியை ஊக்கப்படுத்தியவர் ஹோவர்ட் ஆவார்.

இதனால், விரைவிலேயே உள்ளூர் கிரிக்கெட்களில் சாதிக்கத் தொடங்கிய அவருக்கு, 2020 U19 உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்கிடைத்தது. அதில் அவர் 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இது, அவருடைய அடுத்தகட்ட கிரிக்கெட் பயணத்துக்கு அடித்தளமாக அமைந்தது.

சிறந்த ஸ்பின்னராக உருவெடுத்தார்

2021ஆம் ஆண்டு, தெற்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விக்டோரியா அணிக்காக தனது முதல் தர ஆட்டத்தில் அறிமுகமான மர்பி, அதிலும் சாதிக்க ஆரம்பித்தார். இதுவரை ஏழு முதல் தர ஆட்டங்களில் மட்டுமே விளையாடியுள்ள மர்பி, அதில் 29 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். தன்னுடைய 2வது முதல் தர போட்டியில் மட்டும் அவர் 7 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். இதன்மூலம், 2022ஆம் ஆண்டில் அவர் ஆஸ்திரேலியாவின் சிறந்த ஸ்பின்னர்களில் ஒருவராக உருவெடுத்தார்.

வார்னேவுடன் விளையாடிய மர்பியின் தந்தை

இவருடைய தந்தை ஜேமி மர்பியும் ஒரு கிரிக்கெட் வீரர் ஆவார். டாட் மர்பியின் தந்தை, சர்வதேச போட்டிகளில் விளையாடவில்லை என்றாலும், மறைந்த ஆஸ்திரேலிய சுழல் ஜாம்பவான் ஷேன் வார்னேவுடன் விளையாடி இருக்கிறார். அவருடன் 1990களில் செயின்ட் கில்டா அணிக்காக விளையாடி உள்ளார். அதை வைத்தே ஜேமியும், தன் மகனை வார்னேவின் ஒரு பகுதியாகப் பார்க்கிறார்.

வார்னேவிடம் உள்ள சில குணநலன்கள் தன் மகனிடமும் இருப்பதாக நம்பிக்கை தெரிவிக்கிறார், ஜேமி. 1988ஆம் ஆண்டுக்குப் பிறகு நடைபெற்று வரும் பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவின் அணியில் இரண்டு ஸ்பெஷலிஸ்ட் ஆஃப் ஸ்பின்னர்களை தேர்வு செய்தது இதுவே முதல் முறை. இதில் சீனியர் வீரரான நாதம் லயன். மற்றொருவர் டாட் மர்பி என்பது குறிப்பிடத்தக்கது.

- ஜெ.பிரகாஷ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com