'நீங்க கோலிய அதிகம் புகழ்றீங்க’ என்கிறார்கள்! இப்படி ஒருவீரரை ஏன் புகழக்கூடாது? - அக்தர்

'நீங்க கோலிய அதிகம் புகழ்றீங்க’ என்கிறார்கள்! இப்படி ஒருவீரரை ஏன் புகழக்கூடாது? - அக்தர்
'நீங்க கோலிய அதிகம் புகழ்றீங்க’ என்கிறார்கள்! இப்படி ஒருவீரரை ஏன் புகழக்கூடாது? - அக்தர்
Published on

விராட் கோலியின் தீவிர அபிமானியாகவும், ரசிகராகவும் இருந்துவரும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளரான ஷோயப் அக்தர், தான் ஏன் விராட் கோலியை அதிகம் புகழ்ந்து பேசுகிறேன் என்பதற்கான காரணத்தை பகிர்ந்துள்ளார்.

இன்றைய தலைமுறையின் மிகச்சிறந்த பேட்டராக பலரால் கருதப்படும் விராட் கோலி, கடந்த இரண்டு-மூன்று ஆண்டுகளில் அவருடைய பேட்டிங் பார்மை எடுத்துவராமல் தடுமாறி வந்தது மிகப்பெரிய விவாதப் பொருளாக இருந்தது. இந்நிலையில் தொடர்ந்து பல விமர்சனங்களை சந்தித்து வந்த விராட் கோலி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கிரிக்கெட்டில் இருந்து ஒரு மாதகாலம் இடைவெளி எடுத்து, தனது மன ஆரோக்கியத்திற்காக ஓய்வெடுத்துவிட்டு பின் போட்டிக்கு திரும்பினார்.

ஒரு மாத காலம் ஓய்விலிருந்து திரும்பிய விராட் கோலி, கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசியக் கோப்பையின் போது, தனது சத வறட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து விமர்சனம் வைத்த அனைவரது வாயையும் அடைத்தார். அதற்கு பிறகு தனது வாழ்நாளின் சிறந்த பேட்டிங்கை, பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக்கோப்பை போட்டியில் வெளிக்கொணர்ந்த அவர், விமர்சித்த அனைவரது வாயாலையும் அவரை புகழும்படியாக மாற்றி ஒரு மாயாஜாலம் புரிந்தார்.

இந்நிலையில், கோலியின் தீவிர ரசிகராகவும், அபிமானியாகவும் இருந்து வரும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர், இந்திய அணியின் முன்னாள் கேப்டனைப் பற்றி, எப்பொழுதும் உயர்வாக பேசுவது ஏன் என்பதை தற்போது வெளிப்படுத்தியுள்ளார்.

நீங்கள் சச்சினை விட விராட் கோலியை இதில் பாருங்கள்!

விராட் கோலி குறித்து பேசியிருக்கும் ஷோயப் அக்தர், "பாருங்கள், சச்சின் டெண்டுல்கரை உலகின் மிகச்சிறந்த பேட்டர் என்று நான் நம்புகிறேன். ஆனால் ஒரு கேப்டனாக சச்சினை பார்த்தால், அவர் அதில் தோற்றுப்போனார். அவர் தன்னுடைய கேப்டன் பதவியிலிருந்து, தானாகவே விலகினார். நான் எனது நண்பர் ஒருவரிடம் விராட் கோலியைப் பற்றி பேசிக்கொண்டிருந்தேன், நாங்கள் இதுகுறித்து தான் விவாதித்தோம்.

ஆம் விராட் கோலி கேப்டன்சியை இழந்தார், பார்ம் அவுட் ஆனார், அதிக மன அழுத்தத்தை சந்தித்தார், ஆனால் அவர் அதை எதிர்கொண்டார். அவர் தன்னுடைய மனதை ஒருங்கிணைத்து திரும்பினால், நிச்சயம் சிறப்பாக செயல்படுவார் என்று நாங்கள் நினைத்தோம். ஒருமாத ஓய்விற்கு பிறகு, அவருடைய மன அழுத்தத்தை அவர் போக்கியதும், டி20 உலகக் கோப்பையில் ஒரு மேஜிக்கை நிகழ்த்தி காட்டினார். அப்போது எனக்கு என்ன தோன்றியது தெரியுமா? விராட் கோலி மீண்டு வருவதற்காக தான் கடவுள் அந்த போட்டியையே ஏற்பாடு செய்ததாகத் தோன்றியது" என்று அக்தர் கூறியுள்ளார்.

இப்படி ஒரு வீரரை ஏன் புகழக்கூடாது?

மேலும், "கோலி அடித்த சதங்களில் கிட்டத்தட்ட 40 சதங்கள் ரன் சேஸிங்கில் வந்தது தான். அதையும் நீங்கள் பார்க்க வேண்டும். ஒரு கட்டத்தில் எல்லாம், விராட் கோலியின் சதங்களால் தான் இந்தியா வெற்றி பெற்றது. சிலர் நீங்கள் விராட் கோலியை அதிகம் புகழ்வதாக என்னிடம் கூறுகிறார்கள். நான் ஏன் அதை செய்யக்கூடாது?. இப்படி ஒரு வீரரை நான் ஏன் புகழக்கூடாது" என்று அவர் மேலும் கூறினார்.

டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் தன்னுடைய சதவறட்சியை முடிவுக்கு கொண்டுவந்த விராட் கோலி, டெஸ்ட் போட்டிகளில் இன்னும் சதத்தை கொண்டுவராமல் இருந்துவருகிறார். அடுத்த போட்டியில் இந்திய சூப்பர்ஸ்டார் பேட்டரான விராட் கோலி, சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி டெஸ்ட் போட்டியிலும் ஒரு சிறாப்பான இன்னிங்ஸை ஆடவேண்டும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com