அமெரிக்க நட்சத்திர டென்னிஸ் வீரரான ரஃபேல் நடால், டென்னிஸ் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலில் இருந்து முதல் 10 இடங்களிலிருந்து வெளியேறி உள்ளார்.
கடந்த ஆஸ்திரேலிய ஓபன் தொடரின் போது ஏற்பட்ட காயத்தின் விளைவாக, நடால் தொடர்ந்து எந்த விதமான டென்னிஸ் தொடரிலும் விளையாடாமல் தவிர்த்து வருகிறார். இந்நிலையில் எதிர்வரும் மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் தொடரான களிமண் மைதானமானத்தில் விளையாடப்படும் தொடரில் பங்குபெற்று விளையாடுவதற்காக மீண்டும் தன்னை தயார்படுத்தி வருகிறார் நடால். ஆனால் தற்போது வெளியிடப்பட்டிருக்கும் ஏடிபி தரவரிசை பட்டியலில், முதல் 10 இடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டு 13ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார். இந்த நிகழ்வானது கடந்த 18 ஆண்டுகால டென்னிஸ் வரலாற்றில் நிகழாத ஒன்றாக இருந்து வந்தது, தற்போது நடாலின் அந்த சாதனை தகர்ந்துள்ளது.
ஏடிபி தரவரிசை பட்டியலில் 13ஆவது இடத்திற்கு சென்ற நடால்!
ஆஸ்திரேலிய ஓபன் தொடரின் போது ஏற்பட்ட காயத்தின் காரணமாக அவரால் அடுத்து நடைபெற்ற இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் போட்டியில் கூட புள்ளிகளை பாதுகாக்க முடியவில்லை. இந்நிலையில் தரவரிசை பட்டியலில் 9ஆவது இடத்தில் இருந்த ரஃபேல் நடால், 4 இடங்கள் கீழிறக்கப்பட்டு 13ஆவது இடத்திற்கு தள்ளப்படுள்ளார். 22 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ஒரு வீரர் 18 ஆண்டுகாலம் டாப் 10 ரேங்கிங்கில் இருந்து தக்கவைத்து வந்த ஒரு சாதனை, தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
ஆறு இந்தியன் வெல்ஸ் போட்டிகளில் ஒரு செட் பாய்ண்ட்ஸ்களை கூட இழக்காத 19 வயது ஸ்பெயின் வீரரான கார்லோஸ் அல்கராஸ், BNP பரிபாஸ் ஓபன் டைட்டில் இறுதிப் போட்டியில் 6-3, 6-2 என்ற செட் கணக்கில் தரவரிசையில் 4ஆவது வீரராக இருக்கும் டேனில் மெட்வெடேவை தோற்கடித்து கோப்பையை வென்றதற்கு பின் ஏடிபி தரவரிசையில் உலகத்தின் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளார். நட்சத்திர வீரர் நோவக் ஜோகோவிச் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார்.
934 வாரங்களாக இருந்து, 1000 வாரங்கள் என்ற சாதனையை இழந்த நடால்!
இதுவரை 1000 வாரங்களாக டாப் 10 ரேங்கிங்கில் இருந்த ஒரே வீரராக அமெரிக்காவின் நட்சத்திர வீராங்கனையான மார்டினா நவ்ரதிலோவா இருந்து சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் அந்த சாதனையை ஆடவர் தரவரிசையில் ரஃபேல் நடால் நிகழ்த்தி காட்டுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், 934 வாரங்களுக்கு பிறகு நடால் அதனை தவறவிட்டுள்ளார்.
அப்போ உலக மக்கள் தொகை 6.5 பில்லியன் தான்.. அல்கராஸ்-க்கு வெறும் 1 வயசு தான்!
கடைசியாக 2005ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதியன்று டாப் 10 தரவரிசையில் இல்லாமல் இருந்தார் நடால். அப்போது உலக மக்கள் தொகை 6.5 பில்லியனாக தான் இருந்தது. தற்போது உலக மக்கள் தொகை 8 பில்லியன். மேலும் யூ-டியூப் பிறந்து ஒருநாள் தான் ஆகியிருந்தது. அதுமட்டுமல்லாமல் தற்போது உலக நம்பர் 1 வீரராக இருக்கும் கார்லோஸ் அல்கராஸ்-க்கு வெறும் 1 வயது தான். இப்படி பல பிரம்மிப்புகளை உள்ளடக்கிய ரஃபேல் நடாலின் 18 ஆண்டுகால சாதனை தற்போது முடிவுக்கு வந்துள்ளது.