71 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டே நாளில் முடிவுக்கு வந்த டெஸ்ட் போட்டி
சுழற்பந்து வீச்சாளர்களின் அசத்தலான பந்துவீச்சால் அகமதாபாத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை இந்திய அணி இரண்டாவது நாளிலேயே கைப்பற்றியது.
3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 99 ரன்கள் என்ற நிலையில் இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 145 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய இங்கிலாந்து அணி, அக்ஸர் மற்றும் அஸ்வினின் சுழற்பந்துகளை சமாளிக்க முடியாமல் மளமளவென விக்கெட்டுகளை இழந்த அந்த அணி 81 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில் அதிகபட்சமாக அக்ஸர் படேல் 6 விக்கெட்டுகளை எடுத்தார். அஸ்வின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 விக்கெட்களை கடந்து சாதனை படைத்தார்.
இரண்டாவது இன்னிங்ஸில் 33 ரன்கள் முன்னிலை பெற்றிருந்ததை அடுத்து, இந்திய அணிக்கு 48 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி அதிரடியாக ரன்களைக் குவித்து 7.4 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 49 ரன்கள் எடுத்து எளிதாக வெற்றி பெற்றது. இதனால் 71 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது நாளிலேயே முடிவுக்கு வந்த டெஸ்ட் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.