பாகிஸ்தானை பந்தாடி ஆசியக் கோப்பையை வென்று வரலாறு படைத்தது இலங்கை அணி!

பாகிஸ்தானை பந்தாடி ஆசியக் கோப்பையை வென்று வரலாறு படைத்தது இலங்கை அணி!
பாகிஸ்தானை பந்தாடி ஆசியக் கோப்பையை வென்று வரலாறு படைத்தது இலங்கை அணி!
Published on

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இலங்கை அணி ஆறாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

15-ஆவது ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் 20 ஓவர் போட்டியாக நடத்தப்பட்டு வந்தது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற இந்த தொடரில், ஹாங்காங், வங்கதேசம் அணிகள் லீக் சுற்றோடு வெளியேறின. இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் சூப்பர்-4 (SUPER-4) சுற்றுடன் நடையைக் கட்டின. சூப்பர்-4 சுற்றில் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இலங்கை அணியும், இரண்டில் வெற்றிகண்ட பாகிஸ்தான் அணியும் இறுதிப் போட்டிக்கு முன்னேறின. நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பவுலிங்கை தேர்வு செய்தார்.

இலங்கை அணியின் ஓப்பனர்களாக நிஷங்கா மற்றும் குஷால் மெண்டிஸ் ஆகியோர் களமிறங்கினர். முதல் ஓவரை வீசிய நசீம் ஷா , ஓப்பனர் குஷல் மெண்டிஸை டக் அவுட் ஆக்கி அதிர்ச்சி அளித்தார். அடுத்து களமிறங்கிய தனஞ்செயா நிஷாங்காவுடன் இணைந்து ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார். ஏதுவான பந்துகளை மட்டும் எல்லைக்கோட்டுக்கு இந்த ஜோடி விரட்டிக் கொண்டிருந்த நிலையில், ஹரிஸ் ரவுஃப் பந்துவீச்சில் தனது விக்கெட்டை பறிகொடுத்து அதிர்ச்சி அளித்தார் நிஷாங்கா.

அடுத்து களமிறங்கிய குணதிலகாவுடன் இணைந்து தனஞ்செயா அதிரடியாக விளையாடத் துவங்கியதால் ஸ்கோர் விறுவிறுவென உயரத் துவங்கியது. ஆனால் ஒரு ரன் எடுத்த நிலையில் பெவிலியனுக்கு குணதிலகா திரும்பவே ராஜபக்சவுடன் இணை சேர்ந்தார் தனஞ்செயா. ராஜபக்சேவுடன் இணைந்து பொறுப்பாக ஆடி வந்த தனஞ்செயா 28 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை அகமதுவின் பந்துவீச்சில் இழந்து வெளியேறினார். அடுத்து களமிறங்கிய ஷனகாவும் 2 ரன்களில் பெவிலியனுக்கு நடையைக் கட்ட 62 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இலங்கை அணி.

இதையடுத்து இணை சேர்ந்த ராஜபக்சே - ஹசரங்கா சரிவிலிருந்து அணியை வெற்றிகரமாக மீட்டனர். ஷப்தப் கான் வீசிய ஓவரில் இருவரும் தலா ஒரு பவுண்டரிகளை விசி அசத்தினர். முகமது ஹஸ்னைன் வீசிய ஓவரில் ஹசரங்கா ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் விளாசி அதகளம் செய்தார். இந்நிலையில் 36 ரன்கள் எடுத்த நிலையில் ஹசரங்கா தனது விக்கெட்டை பறிகொடுக்க, கருணாரத்னேவுடன் இணை சேர்ந்தார் ராஜபக்சே. நசீம் ஷா வீசிய ஓவரில் இருவரும் தலா ஒரு சிக்ஸரை விளாசி அசத்தினர்.

தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ராஜபக்ச 35 பந்துகளை சந்தித்த நிலையில் அரைசதம் கடந்து அசத்தினார். இந்நிலையில் இலங்கை வீரர்கள் கொடுத்த இரு லட்டு போன்ற கேட்சுகளை பாக். வீரர்கள் தவறவிடவே இலங்கை அணி மிக இலகுவாக 160 ரன்களை கடந்தது. 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 170 ரன்களை குவித்தது இலங்கை அணி. ராஜபக்ச 45 பந்துகளில் 71 ரன்கள் விளாசினார். 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கியது பாகிஸ்தான் அணி.

தொடக்க வீரர்களாக ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம் ஆகியோர் களமிறங்கிய நிலையில் முதல் 2 விக்கெட்களை அடுத்தடுத்து இழந்தது பாக். அணி. முகமது ரிஸ்வான், இஃப்திகார் அகமது ஆகியோரின் அதிரடியால் பாகிஸ்தான் அணியின் கை ஓங்கியது. 2 விக்கெட் இழப்பிற்கு 93 ரன்கள் என வலுவான நிலையில் இருந்தபோது, இஃப்திகார் அகமது 32 ரன்களில் ஆட்டமிழக்க, ஆட்டத்தின் போக்கு தலைகீழாக மாறியது.

அரைசதத்தை கடந்த ரிஸ்வான், 55 ரன்களில் பெவிலியன் திரும்பினார். பின்னர் வந்த வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் விக்கெட்டை இழந்தனர். முடிவில் பாகிஸ்தான் அணி 147 ரன்களில் ஆட்டமிழந்தது. பிரமோத் மதுஷன் 4 விக்கெட்களையும், ஹசரங்கா 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். 23 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்த இலங்கை அணி, 6ஆவது முறையாக ஆசியக் கோப்பையை வென்று அசத்தியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com