இலங்கை கேப்டன் சனகாவை மன்கட் முறையில் அவுட்டாக்கியும், அதை வாபஸ் பெற்றதால் இந்திய அணியின் மாண்பு உயர்ந்திருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கவுகாத்தியில் நேற்று (ஜனவரி 10) நடைபெற்ற இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்தப் போட்டியில் 374 ரன்களை எடுக்க இலங்கை அணி ஆரம்பத்திலேயே விக்கெட்களை இழந்தது. ஒருகட்டத்தில் 38 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 206 ரன்களை எடுத்திருந்த அந்த அணி, அதற்கு மேல் விக்கெட்டை இழக்காமல் அடுத்த 12 ஓவர்களில் 100 ரன்களைச் சேர்த்தது. வெற்றியை அந்த அணி பெறாவிட்டாலும், நல்ல ஸ்கோரை எடுக்க அவ்வணியின் கேப்டன் தசூன் சனகா தனி ஒருவனாக நின்று போராடினார்.
இந்த நிலையில், கடைசி ஓவரை முகம்மது ஷமி வீசினார். அப்போது சனகா, 98 ரன்களில் விளையாடிக் கொண்டிருந்தார். முகம்மது ஷமி கடைசி ஓவரின் 4வது பந்தை வீசியபோது, எதிர்முனையில் நின்ற சனகா, கிரீஸைவிட்டு வெளியேறினார். இதைப் பார்த்த முகம்மது ஷமி, அவரை மன்கட் முறையில் ரன் அவுட் செய்தார். இதனையடுத்து, நடுவர் தீர்ப்பு வழங்குவதற்காக 3வது நடுவரை நாடினார். ஆனால், ரோகித் சர்மா ‘இந்த அவுட்டுக்கு நாங்கல் அப்பீல் செய்யவில்லை. இதனை வாபஸ் பெறுகிறோம்’ என்றார். இதையடுத்து, சனகா மீண்டும் பேட்டிங் செய்ததுடன், இரண்டாவது சதத்தையும் அடித்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்த ரோகித், ”சிறப்பாக விளையாடி 98 ரன்களை எடுத்த சனகாவை அவுட் செய்வதற்கு அது சரியான வழியல்ல” எனத் தெரிவித்திருந்தார்.
ரோகித் சர்மாவின் இந்தச் செயலை கிரிக்கெட் விமர்சகர்கள் பலரும் பாராட்டி இருந்தனர். குறிப்பாக இலங்கை கிரிக்கெட் வாரியம் மற்றும் அவ்வணியின் முன்னாள் வீரர்கள் ஜெயசூர்யா, ஏஞ்சலோ மேத்யூஸ் ஆகியோர் பாராட்டியிருந்தார்கள். ஆனால், இந்தப் பாராட்டுக்கு இந்திய ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அதிலும் ஷேவாக் விளையாண்ட ஓர் ஆட்டத்தைப் பகிர்ந்து அதிருப்தி தெரிவித்தாலும் இந்திய அணியின் மாண்பைப் புகழ்ந்து வருகின்றனர். கடந்த 2010ஆம் ஆண்டு நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் தொடரில் தம்புலாவில் நடைபெற்ற 3வது போட்டியில் இலங்கை 170 ரன்கள் எடுத்தது. இதனை துரத்திய இந்திய அணியின் சார்பில் ஷேவாக் 11 பவுண்டரி 2 சிக்சருடன் 99 ரன்கள் விளாசி வெற்றியை உறுதிசெய்தார்.
கடைசி நேரத்தில் இலங்கை அணியின் ஆஃப் ஸ்பின்னர் சூரஜ் ரந்திவ், இந்தியா வெற்றி பெற ஒரு ரன் தேவை என்ற நிலையில் வேண்டுமென்றே நோ-பால் வீசி சேவாக் சதமெடுப்பதைத் தடுத்தார். வீசப்பட்ட பந்து சிக்சருக்குச் சென்றது. எனவே தார்மீக ரீதியாக சேவாக் சதம் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால், கிரிக்கெட் விதிகளின் படி நோ-பால் வீசி விட்டதால் அப்போதே ஆட்டம் முடிந்து விட்டது. இந்தியா வென்றுவிட்டது. இதனால் சேவாக் 1 ரன்னில் சதத்தைத் தவறவிட்டார். அப்போது, சூரஜ் ரண்டிவ்வை, அப்படிச் செய்யச் சொல்லி அறிவுறுத்தியதே இலங்கை முன்னாள் கேப்டனான குமார சங்ககாரா என விசாரணையில் தெரியவந்தது. அந்த நினைவலைகளை இந்திய ரசிகர்கள் தற்போது சமூக வலைதளங்களில் பகிர்ந்து இந்திய அணியின் மாண்பை உலகுக்கு எடுத்துரைத்து வருகின்றனர்.
- ஜெ.பிரகாஷ்