டி20 உலகக்கோப்பையில் இந்திய மகளின் அணி பேட்டிங் செய்த போது, பாகிஸ்தான் வீராங்கனையான நிடா தார், 7 பந்துகள் வீசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் 8வது மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர், கடந்த 10ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. 10 அணிகள், இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு இதில் விளையாடி வருகின்றன. இதில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இதில் இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் ’பி’ பிரிவில் இடம்பெற்றுள்ளன.
இந்திய அணிக்கு 150 ரன் இலக்கு
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கான முதல் லீக் போட்டி நேற்று (பிப்ரவரி 12) கேப்டவுன் மைதானத்தில் நடைபெற்றது. அதன்படி, இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது. பின்னர் 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது.
7வது ஓவரில் 7 பந்துகள்!
அப்போது 7வது ஓவரை, பாகிஸ்தான் நட்சத்திர பந்துவீச்சு வீராங்கனையான நிடா தார் வீசினார். அவர், அந்த ஓவரில் 7 பந்துகள் வீசியதும், அதை, மைதான நடுவர் கவனிக்கத் தவறியதும்தான் தற்போது விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது. அதுமட்டுமின்றி, அந்த ஒரு பந்தை அவர் எக்ஸ்ட்ராவாக வீசி, 4 ரன்களையும் வழங்கியுள்ளார். அவரது 7வது ஓவரில் முதல் பந்தில் 1 ரன் எடுக்கப்பட்டுள்ளது. அடுத்து 2வது பந்தில் ரன் வழங்கப்படவில்லை. திரும்ப 3 மற்றும் 4வது பந்துகளில் தலா 1 ரன் வழங்கிய அவர், 5வது பந்தில் 2 ரன்களையும், 6வது பந்தில் 1 ரன்னையும் வழங்கியுள்ளார். அத்துடன் ஓவர் முடிந்த நிலையில் (1 ஓவருக்கு 6 பந்துகள்தான் வீசவேண்டும் என்பது கிரிக்கெட் விதி) நிடா தார் 7வது பந்தை வீசியுள்ளார்.
கூடுதலாக இந்திய அணிக்கு கிடைத்த 4 ரன்கள்!
இதில்தான், ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஒரு பவுண்டரி அடித்துள்ளார். இதன்மூலம் இந்திய அணிக்கு 1 பந்தும் 4 ரன்களும் கூடுதலாய்க் கிடைத்துள்ளது. இதை மைதான நடுவர் கவனிக்காததால் தற்போது விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறார். இந்த வீடியோதான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தப் போட்டியில் இந்திய மகளிர் அணி 19 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டிவிட்டது. ஒருவேளை கடைசி பந்துவரை போட்டி சென்று இருந்தால் இந்த விவகாரம் இன்னும் பூதாகரமாக வெடித்து இருக்கும். முதல் ஓவரிலேயே இந்திய அணி வெற்றி பெற்றுவிட்டதாலும் விக்கெட்டுகளும் பெரிதாக விழவில்லை என்பதாலும் பெரிய விஷயமாக மாறவில்லை.
அஸ்வினுக்கும் நிகழ்ந்த சம்பவம்!
இதேபோல், கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற ஐபிஎல் போட்டியின்போது தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 7 பந்துகளை வீசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மொகாலியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற லீக் போட்டியின்போது இந்த விசித்திர சம்பவம் நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பீல்டிங் செய்தது. அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணியின் டி காக், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
முதல் ஓவரை அஸ்வின் வீசினார். முதல் 6 பந்தில் அஸ்வின் 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்திருந்தார். அத்துடன் முதல் ஓவர் முடிந்திருக்க வேண்டும். ஆனால் அதை அஸ்வினும் மைதான நடுவரும் கவனிக்கத் தவறியதைத் தொடர்ந்து அஸ்வின் 7வது பந்தை வீசினார். இதில் டி காக் பவுண்டரி விளாசினார். இந்த விஷயத்தை 2வது ஓவரில், வர்ணனையாளர்கள் தெரிவித்தபோதுதான் அஸ்வின் 7 பந்துகள் வீசியது தெரியவந்தது. தற்போது பாகிஸ்தான் வீராங்கனையான நிடா தார் உலகக்கோப்பையில் வீசியிருப்பதுதான் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
- ஜெ.பிரகாஷ்