உச்சநீதிமன்றத்தால் பேரறிவாளன் விடுதலை ஆன நிலையில் மற்ற ஆறு பேரும் விரைவில் விடுதலை ஆவார்கள் என நளினியின் வழக்கறிஞர் கூறியுள்ளார்.
உச்சநீதிமன்றத்தால் பேரறிவாளன் விடுதலை ஆன நிலையில் சிறையில் உள்ள மற்ற ஆறு பேரும் விரைவில் விடுதலை ஆவார்கள் என நளினியின் வழக்கறிஞர் எம். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
“பேரறிவாளன் மட்டும் உச்ச நீதிமன்றம் சென்றதால் அவரை மட்டும் விடுதலை செய்துள்ளது. மற்ற 6 பேரும் உச்ச நீதிமன்றம் போயிருந்தால், இன்றே 6 பேரும் விடுதலை ஆகியிருப்பார்கள். இந்த தீர்ப்பு மற்ற 6 பேரின் விடுதலைக்கும் நிச்சயம் உதவும். முழுமையாக நீதி வழங்கும் அதிகாரத்தின் கீழ் இந்த தீர்ப்பு வழங்குவதாக கூறியுள்ளனர். ஒரு வாரத்தில் நீதிமன்றத்தை மற்ற 6 பேரும் அணுகினால் அவர்களும் விடுதலை ஆவார்கள்.
ஆளுநரின் செயலின்மை காரணமாக நளினி வழக்கு தொடர்ந்துள்ளார். அதன் அடிப்படையிலேயே உச்ச நீதிமன்றம் முடிவெடுத்துள்ளதால் மற்ற 6 பேரும் விடுதலை ஆவார்கள். பேரறிவாளன் மட்டுமல்லால் உச்ச நீதிமன்றமே 7 பேரையும் விடுவித்திருக்கலாம். உச்ச நீதிமன்ற உத்தரவுபடி உயர் நீதிமன்றம் செயல்படும் என நம்புகிறோம். ஆளுநர் முடிவெடுக்க குறிப்பிட்ட கால அவகாசத்தை குறிப்பிட்டு தீர்ப்பு எழுதி இருந்தால் என எழுதி இருந்தால், பேரறிவாளன் போல மற்ற எல்லா கைதிகளுக்கும் உதவும் வகையில் இருந்திருக்கும்.” என்று தெரிவித்தார்.
மேலும் பேரறிவாளன் வழக்கின் தீர்ப்பின் முழு விவரங்களை படித்துவிட்டு அடுத்த 2 தினங்களில் உச்சநீதிமன்றத்தில் விடுதலை கோரி மனு தாக்கல் செய்யப்படும் என ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளில் ஒருவரான ரவிச்சந்திரன் தரப்பு வழக்கறிஞர் கூறியுள்ளார்.
“வழக்கின் வாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுதே தங்களையும் ஒரு இடை மனுதாரராக சேர்த்துக் கொள்ள வேண்டும் என ரவிச்சந்திரன் சார்பில் முறையிட்டோம். அதற்கு நீதிபதிகள் இந்த வழக்கின் தீர்ப்பை பொறுத்து எங்கள் மனு தாக்கல் செய்யுங்கள் என அறிவுறுத்தி இருந்தார். தற்போது தீர்ப்பு வந்து விட்டதால் அதில் இருக்கக்கூடிய சாதக அம்சங்களை குறிப்பிட்டு அடுத்த இரண்டு தினங்களில் விடுதலை கோரி மனு தாக்கல் செய்யப்படும்” என ரவிச்சந்திரன் தரப்பு வழக்கறிஞர் ஆனந்த் கூறியுள்ளார்.