இந்தியாவின் தங்க மங்கை; கால்ஃப் நாயகி - யார் இந்த அதிதி அஷோக்?

இந்தியாவின் தங்க மங்கை; கால்ஃப் நாயகி - யார் இந்த அதிதி அஷோக்?
இந்தியாவின் தங்க மங்கை; கால்ஃப் நாயகி - யார் இந்த அதிதி அஷோக்?
Published on

நடப்பு ஒலிம்பிக் தொடரில் ஹாக்கி, பேட்மிண்டன், மல்யுத்தம், தடகளம் இவைகளைத் தாண்டி, அவ்வளவு பரிச்சயம் இல்லாத கால்ஃப் போட்டியை பார்ப்பதற்கு அதிகாலை முதலே இந்தியர்களை தொலைக்காட்சி முன் கட்டிவைத்தவர் அதிதி அஷோக். நூல் இழையில் பதக்க வாய்ப்பை இழந்த அந்த தங்க மங்கையின் வரலாறு இதோ.

அதிதி அஷோக். கடந்த சில நாட்களுக்கு முன் இந்தப் பெயர் விளையாட்டுலகம் அவ்வளவாக அறிந்திராதது. இவர் சாதித்த கால்ஃப் போட்டியும், அந்தளவுக்கு இந்தியாவில் பிரபலமான விளையாட்டும் அல்ல. சப்தமில்லாமல் தேசத்தின் பதக்க தேவதையாக உருவெடுத்திருந்தார்.

பெங்களுருவைச் சேர்ந்த 23 வயதாகும் அதிதிக்கு 5 வயதிலேயே கால்ஃப் விளையாட்டின் மீது ஆர்வம் ஏற்பட்டது. தந்தை அஷோக் குட்லமணியும், தாயார் மாஷ்-சும் அதிதியின் ஆர்வத்தை உணர்ந்து அதற்கேற்ற பயிற்சியெடுக்க வழிவகை செய்தனர். கால்ஃப் விளையாட்டின் அடிப்படை நுணுக்கங்களை கற்ற பின், அந்த விளையாட்டின் மீது தமது தனித்திறமையை வெளிப்படுத்த தொடங்கினார் அதிதி அஷோக். இதன் காரணமாக 9 வயதிலேயே தேசிய அளவிலான போட்டியில் பட்டத்தை வென்றார் அதிதி. இதன்பின்னர் சர்வதேச அளவிலான அமெச்சுர் போட்டிகளில் வெற்றிகளை ஈட்டிய அதிதி, பின்னர் தொழில்முறை போட்டிகளில் கலந்து கொள்ளத் தொடங்கினார். அந்த ஆண்டு மகளிர் ஐரோப்பிய டூர் போட்டிக்கு தேர்வான முதல் இந்தியர் என்ற சிறப்பை அவர் பெற்றார்.

112 ஆண்டுகளுக்கு பிறகு 2016-ஆம் ஆண்டு ரியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் கால்ஃப் சேர்க்கப்பட்டது. அதில், கலந்து கொள்ள தேர்வானார் அதிதி. அப்போது அவருக்கு வயது 18. இதன்மூலம் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட இளம் கால்ஃப் வீராங்கனை என்ற சாதனையை அதிதி நிகழ்த்தினார். அந்த ஆண்டு நடைபெற்ற தொழில்முறை போட்டிகள் இரண்டில் பட்டம் வென்றும் சாதித்தார். இதன்பின்னர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கும் அவர் தேர்வானார்.

4 சுற்றுகள் கொண்ட தனிநபர் போட்டியில் 60 வீராங்கனைகள் அவருடன் போட்டியிட்டனர். குறிப்பிடத்தக்க அம்சமாக கால்ஃப் போட்டியில் CADDIE என்று அழைக்கப்படும் உதவியாளர் பணியை அவரது தாயார் மேஷ் செய்தார்.

முதல் மூன்று சுற்றுகளின் முடிவில் 2 ஆவது இடத்தில் இருந்ததால் தேசத்தின் பார்வை அவர் பக்கம் திரும்பியது. மோசமான வானிலை காரணமாக ஆட்டம் தடைபட்டு இந்திய நேரப்படி அதிகாலையில் தொடங்கியது. பதக்க நம்பிக்கையாக திகழ்ந்த அதிதியின் ஆட்டத்தை, லட்சக்கணக்கானோர் பார்த்தனர்.

இப்போட்டியில், அமெரிக்க வீராங்கனை நெல்லி கோர்டா தங்கப்பதக்கம் வென்றார். ஜப்பான் வீராங்கனை மோனோ இனாமி வெள்ளிப் பதக்கத்தையும், நியூசிலாந்து வீராங்கனை லிடியா கோ வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றினர். தொடர்ந்து பதக்கத்துக்கான வரிசையில் இருந்த இந்திய வீராங்கனை அதிதி அஷோக் அவர்களைவிட 1 புள்ளி வித்தியாசத்தில் 4ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டு பதக்க வாய்ப்பை தவறவிட்டார். ஒலிம்பிக் கால்ஃப் வரலாற்றில் அதிதியின் பயணமே இந்தியா சார்பில் சாதனையாக பதிவாகியுள்ளது. பதக்கத்தை தவறவிட்டாலும் மிகச்சிறந்த திறமையை வெளிப்படுத்தியதாக அதிதியை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com