டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு சகாப்தமாக உருவாகினார் கோலி !

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு சகாப்தமாக உருவாகினார் கோலி !
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு சகாப்தமாக உருவாகினார் கோலி !
Published on

வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வென்றதன் மூலம் அதிக வெற்றிகளை பெற்ற இந்திய கேப்டன் என்ற சாதனையை படைத்துள்ளார் விராட் கோலி. அந்த வகையில் கிரிக்கெட்டின் ரன் மிஷின், மோஸ்ட் சக்சஸ் ஃபுல் கேப்டன் என்று அழைக்கப்படும் விராட் கோலியின் டெஸ்ட் பயணத்தை திரும்பி பார்க்கும் தருணம் இது.  

கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் செய்தது. இந்தத் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி அடெலாய்ட் (Adelaide) மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் காயம் காரணமாக கேப்டன் தோனி பங்கேற்காததால் முதன்முறையாக இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக விராட் கோலி நியமிக்கப்பட்டார். 

இந்தப் போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் இன்னிங்ஸில் 115 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 141 ரன்கள் எடுத்தார். ஆனாலும் இந்திய அணி தோல்வியை தழுவியது. இந்தப் போட்டியில் இரண்டு சதங்கள் அடித்ததன் மூலம் கேப்டனாக பங்கேற்ற முதல் போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும் சதம் கடந்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை கோலி படைத்தார். இதற்கு ஆஸ்திரேலியா கேப்டனும் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளுமான கிரேக் சேப்பல் இந்தச் சாதனையை படைத்திருந்தார்.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தோனி திரும்ப வந்துவிட்டார். இதனால் மீண்டும் கோலி கேப்டன் பதவியை இழந்தார். இதனையடுத்து மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முடிவில் தோனி திடீரென ஓய்வை அறிவித்தார். இதனால் 4 போட்டியிலிருந்து இந்திய அணியின் முழுநேர டெஸ்ட் கேப்டனாக கோலி களமிறங்கினார். அந்தப் போட்டியிலும் சதம் அடித்த கோலி ஒரே தொடரில் 4 சதம் விளாசி அசத்தினார்.

கடந்த 2015ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி பங்கேற்றது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. எனினும் அதன்பிறகு சிறப்பாக விளையாடிய இந்திய அணி 2-1 என்ற கணக்கில் இலங்கையில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. இதுவே கோலி பெற்ற முதல் டெஸ்ட் தொடர் வெற்றியாகும். 22 ஆண்டுகளுக்குப் பிறகு, இலங்கையில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிப் பெரும் முதல் தொடராகவும் இது அமைந்தது. 

இதனைத் தொடர்ந்து இந்தியாவில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. இந்திய அணி 2016ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் மேற்கொண்டது. அந்த டெஸ்ட் தொடரையும் 2-0 என்ற கணக்கில் வென்றது. பின்னர் இந்தியாவில் நடைபெற்ற தொடர்களிலும் இந்திய அணி தொடர் ஆதிக்கம் செலுத்தியது. நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரை 3-0 என்ற கணக்கிலும், இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரை 4-0 என்ற கணக்கிலும் வென்றது.

அத்துடன் பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரையும் இந்திய அணி கைப்பற்றியது.  இந்த வெற்றிகளின் மூலம் 2015 ஆகஸ்ட் முதல் 2017 பிப்ரவரி நடைபெற்ற 19 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியையே சந்திக்காத கேப்டன் என்ற சாதனையை படைத்தார் கோலி.  இதற்கு முன்பு 1976-1980 ஆம் ஆண்டு வரை 18 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை சந்திக்காத இந்திய கேப்டனாக சுனில் கவாஸ்கர் இருந்தார். தொடர் வெற்றிகளின் மூலமாக அந்தச் சாதனையை முறியடித்தார் விராட் கோலி. 

இதனையடுத்து இந்திய கிரிக்கெட் அணி தனது உள்ளூர் டெஸ்ட் போட்டிகள் தொடர்களை முடித்து விட்டு வெளிநாட்டு சுற்றுப்பயணத்திற்கு சென்றது. முதலில் இலங்கை சென்ற இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றது. இரண்டாவதாக தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி டெஸ்ட் தொடரை 2-1 என இழந்தது. இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் இந்திய அணி தோற்றது. எனவே மீண்டும் இந்திய அணி அந்நிய நாடுகளில் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக செயல்படவதில்லை என்ற விமர்சனம் எழுந்தது.

இதனைத் தொடர்ந்து இந்திய அணி 2018ஆம் ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்தது. விமர்சனத்திற்கு பிறகான தொடர் என்பதால் இந்தத் தொடர் மிக முக்கியமானதாக பார்க்கப்பட்டது. இத்தொடரில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது. இதன்மூலம் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய முதல் ஆசிய கேப்டன் என்ற சாதனையை படைத்ததோடு, மட்டுமல்லாமல் ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணிலே வீழ்த்திய அணி என்ற பெருமையை இந்திய அணிக்கு பெற்று தந்தார் கோலி. இதற்குப் பிறகு இந்திய அணி தற்போது மீண்டும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இந்த வெற்றிகளின் மூலம் அதிக டெஸ்ட் போட்டிகளில் வெற்றிப் பெற்ற இந்திய கேப்டன் என்ற சாதனையை படைத்ததுடன், அந்நிய மண்ணில் அதிக டெஸ்ட் போட்டிகளில் வெற்றிப் பெற்ற கேப்டன் என்ற சாதனையையும் விராட் கோலி படைத்துள்ளார்.

இந்திய அணியின் இந்தத் திடீர் எழுச்சிக்கு காரணம் வேகப்பந்து வீச்சாளர்களும், விராட் கோலியின் சிறப்பான பேட்டிங் ஃபார்மும்தான் என்றால் அது மிகையாகாது. ஏனெனில் இந்திய கிரிக்கெட் அணி அந்நிய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும் என்றால் இரண்டு இன்னிங்ஸிலும் எதிர் அணியை ஆட்டமிழக்க செய்ய வேண்டும் என்று கோலி கூறியிருந்தார். 

அதற்கு ஏற்ப இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா, இஷாந்த் ஷர்மா மற்றும் முகமது ஷமி ஆகிய மூவரும் சிறப்பாக செயல்பட்டனர். இந்த வேகப்பந்து கூட்டணி தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 133 விக்கெட்களை வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. இது அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

 கேப்டன் பொறுப்பு வந்தவுடன் விராட்டிற்கு அதிக நெருக்கடி இருக்கும் என்பதால் அவரின் பேட்டிங்கில் சில சரிவு ஏற்படும் என கூறப்பட்டது. ஆனால் விராட் கோலிக்கு கேப்டன் பதவி எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அவர் கேப்டனாக பொறுப்பேற்று விளையாடிய போட்டிகளில் அவரது பேட்டிங் சராசரி 61 ஆக உயர்ந்தது. 

அத்துடன் 6 முறை இரட்டை சதம் அடித்த கேப்டன் என்ற சாதனையையும் படைத்தார் கோலி. மேலும் தொடர்ச்சியாக நான்கு டெஸ்ட் தொடர்களில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்ற விராட் கோலி, கேப்டனாக இதுவரை விளையாடிய 48 போட்டிகளில் 18 சதங்கள் மற்றும் 12 அரைசதங்களுடன் 4651 ரன்களை குவித்துள்ளார். இவரை விட அதிகமாக தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் மட்டுமே அதிக ரன்கள் அடித்துள்ளார்.

 இவை தவிர கோலியின் கேப்டன் பயணத்தில் சில சுவராஸ்யமான விஷயங்களும் உண்டு. விராட் கோலி கேப்டனாக விளையாடிய முதல் 39 டெஸ்ட் போட்டிகளில் ஒரு முறை கூட ஒரே அணியுடன் இரு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியதில்லை. ஒவ்வொரு டெஸ்ட் போட்டியிலும் அணியில் சிறிய மாற்றங்கள் இருக்கும். அத்துடன் அதிக ரன்கள் அடிப்படையில் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளை வென்ற பட்டியலில் முதல் 20ல் 10 போட்டி விராட் கோலியின் தலைமையில் அமைந்தது குறிப்பிடத்தக்கது.

 மேலும் கேப்டனாக விளையாடியுள்ள போட்டிகளில் பாதி போட்டிகளுக்கு மேல் வெற்றி பெற்ற ஒரே இந்திய கேப்டன் என்ற சாதனையையும் விராட் படைத்துள்ளார். அதாவது இதுவரை கேப்டனாக விளையாடியுள்ள 48 டெஸ்ட் போட்டிகளில் 28 டெஸ்ட் போட்டிகளை கோலி வென்றுள்ளார். இத்தனை சாதனைகளை படைத்துள்ள கோலி, நியூசிலாந்து, இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் தனது வெற்றிப்பயணத்தை தொடர்ந்து, இந்திய அணிக்கு முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்று தருவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com