19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி ஐந்தாவது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. கடந்த 1988 முதல் நடைபெற்று வரும் இந்த தொடரில் 2000, 2006, 2008, 2012, 2016, 2018, 2020, 2022 என 8 முறை இந்திய அணி இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளது. இதில் 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இந்த கோப்பையை அதிக முறை வென்ற அணியும் இந்தியாதான்.
2000
முகமது கைஃப் தலைமையிலான அணி இலங்கை அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி வாகை சூடியது. இந்த வெற்றியின் மூலம் இந்தியா முதல் ஜூனியர் உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது. கொழும்பில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்தியா 40.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.
2006
ரோகித் ஷர்மா, ரவீந்திர ஜடேஜா, புஜாரா மற்றும் பியூஷ் சாவ்லா மாதிரியான வீரர்கள் இந்த அணியில் இடம் பெற்றிருந்தனர். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வியை தழுவியது. பாகிஸ்தான் அணி நிர்ணயித்த 109 ரன்களை சேஸ் செய்ய முடியாமல் 71 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி இருந்தது இந்தியா.
2008
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக முதலில் பேட் செய்து 159 ரன்களை சேர்த்து. அதை விரட்டிய தென்னாப்பிரிக்க அணி 7.4 ஓவர்களுக்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. மழை குறுக்கீடு காரணமாக இந்த போட்டி டக்வொர்த் லூயிஸ் முறையில் மாற்றி அமைக்கப்பட்டது. அதனால் 98 பந்துகளில் 99 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தென்னாப்பிரிக்க அணி 25 ஓவர்கள் முடிவில் 103 ரன்களை மட்டுமே எடுத்து 8 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அதனால் இந்திய இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
2012
குயின்ஸ்லாந்தில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் செய்தது. ஆஸ்திரேலிய அணி 225 ரன்களை எடுத்தது. அதனை சேஸ் செய்த இந்திய அணி 47.4 ஓவர்களில் 227 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சந்த் 111 ரன்கள் எடுத்திருந்தார்.
2016
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் இஷான் கிஷன் தலைமையிலான இந்திய அணி முதலில் பேட் செய்து 45.1 ஓவர்களில் 145 ரன்களை எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி இறுதி ஓவர் வரை விளையாடி வெற்றி பெற்றது.
2018
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 216 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மன்ஜோத் கல்ரா 101 ரன்கள் எடுத்தார். அதன் பலனாக பிருத்வி ஷா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வெற்றி பெற்றது.
2020
வங்கதேச அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியை தழுவியது. டக்வொர்த் லூயிஸ் முறையில் வங்கதேச அணி வெற்றி பெற்றது. பிரியம் கார்க் தலைமையிலான இந்திய அணி தொடர் முழுவதும் சிறப்பான பர்ஃபாமென்ஸ் கொடுத்தும் தோல்வியை தழுவி இருந்தது.
2022
மேற்கிந்திய தீவுகளின் ஆண்டிகுவாவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றியை எட்டியது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து, 189 ரன்கள் எடுத்தது. 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில், ஷேக் ரஷீத் நிதானமாக விளையாடி 84 பந்துகளில் 50 ரன்களை எடுத்தார். நிஷாந்த் சிந்துவும், ராஜ் பாவாவும் பொறுப்பாக விளையாடி 5வது விக்கெட்டுக்கு 67 ரன்களை சேர்த்தனர். ராஜ் பாவா 35 ரன்களுக்கு ஆட்டமிழந்த பின்னர் களம் கண்ட விக்கெட் கீப்பர் தினேஷ் பானா அடுத்தடுத்து 2 சிக்ஸர்களை விளாசி இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார். பந்து வீச்சு, பேட்டிங் என இரண்டிலும் மிளிர்ந்த ராஜ் பாவா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இதையும் படிக்க: இளையோர் கிரிக்கெட்: 5வது முறையாக கோப்பையை வென்று சாதனை.. பாராட்டு மழையில் இந்திய அணி!