390 ரன்கள் குவித்த இந்தியா! மீண்டும் சதம் விளாசி சச்சின் சாதனையை முறியடித்த விராட் கோலி

390 ரன்கள் குவித்த இந்தியா! மீண்டும் சதம் விளாசி சச்சின் சாதனையை முறியடித்த விராட் கோலி
390 ரன்கள் குவித்த இந்தியா! மீண்டும் சதம் விளாசி சச்சின் சாதனையை முறியடித்த விராட் கோலி
Published on

விராட் கோலி மற்றும் சுப்மான் கில் ஆகியோரின் அதிரடி சதங்களால் இந்திய அணி 390 ரன்கள் குவித்துள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை கிரிக்கெட் அணி, தற்போது ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்தியா வெற்றிபெற்று தொடரையும் கைப்பற்றியது. இந்த நிலையில், இவ்விரு அணிகளுக்கான கடைசி ஒருநாள் போட்டி இன்று (ஜனவரி 15) திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது.

3வது போட்டியையும் வென்று இலங்கை அணியை ஒயிட்வாஷ் செய்யும் நோக்கில் இந்திய அணியும், ஆறுதல் வெற்றியையாவது பெற வேண்டும் என்ற நோக்கில் இலங்கை அணியும் களமிறங்கின. இந்திய அணி தரப்பில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டன. துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் உம்ரான் மாலிக் ஆகியோர் நீக்கப்பட்டு இந்திய அணியின் 360 வீரர் என்றழைக்கப்படும் சூர்யகுமார் யாதவ், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் களமிறக்கப்பட்டனர்.

சுப்மன் கில் அதிரடி சதம்:

டாஸ் ஜெயித்த இந்திய அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி தொடக்க பேட்டர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும், சுப்மான் கில்லும் களமிறங்கினர். கடந்த போட்டியில் விரைவாக நடையைக் கட்டிய இந்த ஜோடி, இன்றைய போட்டியில் பொறுமையுடன் விளையாடி ரன்களைச் சேகரிக்க ஆரம்பித்தது. அதேநேரத்தில் ரோகித், மறுபுறம் அதிரடியாக ஆடி 49 பந்துகளில் 42 ரன்கள் (3 சிக்ஸர், 2 பவுண்டரி) எடுத்த நிலையில் வெளியேறினார்.

அவருக்குப் பிறகு களமிறங்கிய முன்னாள் கேப்டன் விராட் கோலி, சுப்மான் கில்லுடன் கைகோர்த்தார். இருவரும் நிலைத்து நின்று விளையாட ஆரம்பித்தனர். அதேநேரத்தில் ஏதுவாக வந்த பந்துகளையும் பவுண்டரி எல்லைக்கு அனுப்பிவைத்தனர். அதன் பயனாக 89 பந்துகளில் சுப்மான் கில் சதமடித்தார். அவர் ஜிம்பாப்வேவுக்கு எதிராக கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் சதத்தை அடித்திருந்தார். அவருக்கு இது, இரண்டாவது சதமாகும். 97 பந்துகளில் 116 ரன்கள் (2 சிக்ஸர், 14 பவுண்டரி) எடுத்த அவர் ரஜிதா பந்துவீச்சில் போல்டானார்.

அவருடன் நல்ல இணக்கமாய் விளையாடிய விராட் கோலியும் 85 பந்துகளில் சதமடித்தார். அவருக்கு இது 46வது சதமாகும்.

விராட் கோலி படைத்த சாதனைகள்!

இந்த தொடரின் முதல் போட்டியில் 45வது சதமடித்து பல சாதனைகளை நிகழ்த்தியிருந்த விராட் கோலி, இன்று அடித்த சதம் மூலம் மேலும் பல்வேறு சாதனைகளைத் தகர்த்துள்ளார். அவர், உள்நாட்டில் அடிக்கும் 21வது சதம் இதுவாகும். கடந்த சதத்தின்போது சச்சின் சாதனையை சமன் செய்திருந்த கோலி, இன்றைய சதம் மூலம் அச்சாதனையை முறியடித்தார். அதுபோல் இலங்கைக்கு எதிராகவும் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி (10 சதங்கள்) முதல் இடத்தில் உள்ளார்.

அது மட்டுமின்றி, 52 ஆண்டுகால ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஓர் அணிக்கு எதிராக 10 சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற சரித்திர சாதனையைப் படைத்துள்ளார்.

ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் சச்சின் முதல் இடத்தில் (49 சதம்) உள்ளார். அவரைத் தொடர்ந்து விராட் கோலி இரண்டாவது இடத்தில் உள்ளார். அவரது சாதனையைத் தகர்ப்பதற்கு இன்னும் 4 சதங்களே உள்ளன.

ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் (டெஸ்ட், ஒருநாள் மற்றும் 20 ஓவர்) கோலியின் 74வது சதமாக இது அமைந்தது. இந்த வரிசையில் சச்சின் தெண்டுல்கர் (100 சதம்) முதலிடத்திலும், விராட் கோலி 2வது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் ரிக்கிபாண்டிங் (71 சதம்) 3வது இடத்திலும் உள்ளனர். இவர்களுக்கு அடுத்தபடியாக டேவிட் வார்னர் (45 சதம்), ஜோரூட்(44 சதம்), ஸ்டீவ் ஸ்மித் (42 சதம்), ரோகித் சர்மா (41 சதம்) என ஆகியோர் உள்ளனர்.

ஜனவரி 15ம் தேதியும் விராட் கோலியின் தொடரும் சதங்களும்!

அதேபோல் ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 15ஆம் தேதி சதம் அடித்து சாதனை படைத்திருக்கிறார், விராட் கோலி. அதில் 2017, 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் தொடர்ச்சியாக ஹாட்ரிக் சதம் விளாசியுள்ளார். 2017 ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டியில் 122(102) ரன்களும், 2018ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 153(217) ரன்களும், 2019ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 104(112) ரன்களும் எடுத்து சாதனை படைத்துள்ளார். அந்தவகையில், இன்று அடித்துள்ள சதமும் சேர்ந்துள்ளது. இதன்மூலம் இந்திய ரசிகர்களுக்கு அதிக பொங்கல் பரிசைத் தந்தவர் விராட் கோலி ஒருவரே.

166 ரன்கள் குவித்த கோலி!

கில்லுக்குப் பிறகு களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் நீண்டநேரம் நிலைக்காவிட்டாலும் தன் பங்குக்கு 38 ரன்கள் எடுத்தார். ஆனால், விராட் கோலியின் ரன் வேட்டை இறுதிவரை தொடர்ந்துகொண்டிருந்தது. இலங்கை அணியினருக்கு தனி ஒருவனாய், ஆட்டமிழக்காது தண்ணி காட்டிய விராட் கோலி, அவர்களுடைய பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். அவர் 110 பந்துகளில் 166 ரன்கள் எடுத்தார். அதில் 8 சிகஸ்ர்களும் 13 பவுண்டரிகளும் அடக்கம். இறுதியில் இந்திய அணி, 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 390 ரன்கள் எடுத்தது. இலங்கை அணி தரப்பில், ரஜிதா மற்றும் லகிரு குமாரா தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

- ஜெ.பிரகாஷ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com