டோக்யோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற வேண்டிய ஒலிம்பிக் போட்டிகள், கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டு இந்த ஆண்டு நடைபெறுகின்றன. உலக விளையாட்டு ஆர்வலர்கள் ஆவலுடன் எதிர்நோக்கிய விளையாட்டு திருவிழா, ஜப்பான் தலைநகர் டோக்யோவில் கட்டுப்பாடுகளுடன் தொடங்கியது.
இந்நிலையில், நியூசிலாந்து அணியுடனான 'ஏ' பிரிவு போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. கடைசிநேரத்தில் கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் சிறப்பாக செயல்பட்டு நியூசிலாந்தின் 2 பெனால்டி கார்னர் வாய்ப்புகளை தடுத்தார். ஹர்மன்பிரீத் சிங் 2 கோல்களையும் ஆர்.பி.சிங் ஒரு கோலையும் அடித்தனர்.
முன்னதாக, கொரோனா அச்சம் காரணமாக, தொடக்க விழா நடந்த அரங்கில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. காலியான தொடக்க விழாவில் வாண வேடிக்கைகள் கண்ணைப் பறித்த நிலையில், ஜப்பான் கலாசார நிகழ்ச்சிகளும் அரங்கேறின. இதில் ஜப்பான் பேரரசர் நருஹிட்டோ, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மனைவி ஜில் பைடன், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் உள்ளிட்ட விருந்தினர்கள் சுமார் 950 பேர் கலந்து கொண்டனர்.
தொடக்க விழாவில் ஆயிரத்து 824 டிரோன்கள் மூலம் மைதானத்தில் ஒளிவெள்ளம் பாய்ச்சப்பட்டது. ஒலிம்பிக் வரலாற்றில் முதன்முறையாக, ஆங்கில அகரவரிசைப்படி இல்லாமல், ஜப்பான் மொழியின் அகரவரிசைப்படி அணிகள் அணிவகுத்தன. இந்தியா அணியை ஹாக்கி அணி கேப்டன் மன்பிரீத் சிங்கும் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமும் தேசியக் கொடியேந்தி வழிநடத்திச்சென்றனர். ஆகஸ்ட் 8 வரை நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த 127 வீரர்கள் உள்பட சுமார் 11,000 வீரர்கள் பங்கேற்கின்றனர்.