2024ஆம் ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ், நியூயார்க் நகரில் தொடங்கவுள்ளது. அடுத்த மாதம் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த தொடருக்கு, எப்போதும் போல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், வெற்றி வாகை சூடுவாரா என்ற ஆவல், ரசிகர்களிடையே அதிகளவில் இருக்கிறது. ஏனெனில் இந்த தொடரில் வெற்றி பெற்றால், அது அவருக்கு 25வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாக அமையும். பாரிஸ் ஒலிம்பிக் டென்னிஸில் தங்கம் வென்ற பின் ஜோகோவிச் பங்கேற்கும் முதல் தொடர் இதுவாகும்.
அமெரிக்க ஓபனை பொறுத்தவரை ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ், இத்தாலியின் ஜன்னிக் சின்னெர் மற்றும் ஜோகோவிச் இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் சுற்றில் ஜோகோவிச், மால்டோவாவின் ராடு ஆல்பட் உடன் மோதுகிறார். உலக தரவரிசையில் 72வது இடத்தில் உள்ள இந்திய வீரர் சுமித் நாகல், நெதர்லாந்து வீரர் டாலன் கிரீஸ்க்பூரை முதல் சுற்றில் எதிர்கொள்கிறார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், பெலாரஸின் அரினா சபலென்கா, அமெரிக்காவின் கோகோ காப் ஆகியோரில் ஒருவர் சாம்பியன் பட்டம் வெல்ல வாய்ப்புள்ளது. இதில், கோகோ காப் கடந்த முறை சாம்பியன் பட்டத்தை தனதாக்கியவர்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை 629 கோடி ரூபாயாகும். இதில் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்பவருக்கு 30 கோடி ரூபாய் பரிசுடன் 2 ஆயிரம் தரவரிசை புள்ளியும் கிடைக்கும். இரண்டாவது இடம் பிடிப்பவருக்கு 15 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும். இரட்டையர் பிரிவில் வாகை சூடும் இணைக்கு ஆறரை கோடி ரூபாயும், கலப்பு இரட்டையர் பிரிவில் சாம்பியனாகும் இணைக்கு ஒரு கோடியே 67 லட்சம் ரூபாயும் பரிசாக கிடைக்கும்.