2023-ம் ஆண்டு நம்பர் 1 வீரரான நோவக் ஜோக்கோவிச்சை விம்பிள்டன் இறுதிப்போட்டியில் தோற்கடித்த பிறகு டென்னிஸ் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு வீரராக உருவெடுத்தார் ஸ்பெய்னை சேர்ந்த கார்லோஸ் அல்கராஸ். அதனைத்தொடர்ந்து 2024 விம்பிள்டன் இறுதிப்போட்டியில் மீண்டும் நோவக் ஜோக்கோவிச்சை தோற்கடித்த அல்கராஸ், தொடர்ச்சியாக இரண்டுமுறை விம்பிள்டனை வென்று சாதனை படைத்தார். அத்துடன் 2024-ம் ஆண்டில் பிரஞ்சு ஓபன் தொடரையும், பாரீஸ் ஒலிம்பிக்கில் இறுதிப்போட்டிவரை முன்னேறி வெள்ளிப்பதக்கமும் வென்று அசத்தினார்.
இத்தகைய சூழலில் அமெரிக்க ஓபனில் கலந்துகொண்ட நிலையில், அமெரிக்க ஓபனை வெல்லக்கூடிய வீரர்களில் ஒருவராக அல்கராஸும் கருதப்பட்டார். 21 வயதிற்குள் உலக சாம்பியன்களை எல்லாம் கதறவிட்ட அல்கராஸுக்கு, அமெரிக்க ஓபன் போட்டி பேரடியை கொடுக்க காத்திருந்தது.
உலக தரவரிசை பட்டியலில் 3-வது இடத்திலிருக்கும் கார்லோஸ் அல்கராஸ், தரவரிசையில் 74-வது இடத்தில் இருக்கும் டச்சு வீரரான போட்டிக் வான் டி சாண்ட்ஸ்சுல்ப்புடன் தோல்வியுற்று இரண்டாவது சுற்றிலேயே தொடரிலிருந்து வெளியேறி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
தோல்வியென்றால் சாதாரண தோல்வியில்லை, கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் 2024 பாரீஸ் ஒலிம்பிக் இறுதிப்போட்டியில் நம்பர் 2 வீரரான நோவக் ஜோக்கோவிச்சுக்கு எதிராக அசுர பலத்துடன் மோதியிருந்தார் அல்கராஸ். அப்படிப்பட்ட வீரரை தன்னுடைய அசாத்திய திறமையின் மூதல் மூன்று நேர்-செட் கணக்கில் தோற்கடித்து வெளியேற்றியுள்ளார் 28 வயதான போட்டிக் வான் டி சாண்ட்ஸ்சுல்ப்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் இரண்டாவது தகுதிச்சுற்றில் ஸ்பெய்னை சேர்ந்த 21 வயது கார்லோஸ் அல்கராஸ் மற்றும் டச்சுவை சேர்ந்த 28 வயதான போட்டிக் வான் டி சாண்ட்ஸ்சுல்ப் இருவரும் பலப்பரீட்சை நடத்தினர்.
முதல்செட்டிலிருந்தே ஆதிக்கம் செலுத்திய போட்டிக், அல்கராஸை எழவே விடாமல் 6-1 என முதல் செட்டை கைப்பற்றினார். ஆனால் இரண்டாவது செட்டில் கம்பேக் கொடுத்த அல்கராஸ் டஃப் கொடுக்க ஆட்டம் 5-5 என விறுவிறுப்பாகவே சென்றது. ஆனால் இறுதிநேரத்தில் சிறப்பாக செயல்பட்ட போட்டிக் இரண்டாவது செட்டையும் 7-5 என கைப்பற்றி அசத்தினார். அதற்குபிறகான மூன்றாவது செட்டில் அல்கராஸ் என்னதான் போராடினாலும் அவரால் வெற்றியை பெறமுடியவில்லை. மூன்று செட்களையும் 6-1, 7-5, 6-4 என கைப்பற்றிய போட்டிக் அல்கராஸை அமெரிக்க ஓபன் தொடரிலிருந்து வெளியேற்றியுள்ளார்.
74வது தரவரிசையில் இருந்தாலும் நம்பர் 3 வீரரை வெளியேற்றி தன்னுடைய திறமையை நிலைநாட்டியுள்ளார் போட்டிக். இதற்கு முன்பு இந்த இரண்டு வீரர்கள் மோதியபோது அல்கராஸ் வெற்றிபெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.