2024 பாரீஸ் ஒலிம்பிக் தொடருக்கு பிறகு நடப்பாண்டுக்கான அமெரிக்க ஒபன் டென்னிஸ் தொடர் நடந்துவருகிறது. பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட தொடராக நடந்துவரும் அமெரிக்க ஓபனில் சாம்பியன் வீரர்களை லீக் சுற்றோடு வெளியேற்றி அதிர்ச்சியளித்து வருகின்றனர் மற்ற இளம்வீரர்கள்.
நடப்பாண்டான 2024-ல் மட்டும் பிரஞ்சு ஓபன் டைட்டில், விம்பிள்டன் டைட்டில் மற்றும் ஒலிம்பிக்கில் வெள்ளி என வெற்றிகரமாக சென்றுகொண்டிருந்த நட்சத்திர வீரர் கார்லோஸ் அல்கராஸை, அமெரிக்க ஓபன் தொடரில் இரண்டாவது சுற்றிலேயே வெளியேற்றி அதிர்ச்சி கொடுத்துள்ளார் டச்சு வீரர் போட்டிக் வான் டி.
இதில் சோகம் என்னவென்றால் கார்லோஸ் தரவரிசை 3-ஆக இருக்கும்பட்சத்தில், போட்டிக்கின் தரவரிசை 74-ஆவதாகும். ஒரு செட்டை கூட வெல்லமுடியாமல் போனபோதும், காயத்தின் காரணமாக தான் அல்கராஸ் தோல்வியடைந்தார் என அவருடைய ரசிகர்கள் கூறிவருகின்றனர்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற மூன்றாவது சுற்றில் நம்பர் 2 வீரரான நோவக் ஜோக்கோவிச்சை, 28வது தரவரிசையில் இருக்கும் அலெக்ஸி பாபிரின் வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவுசெய்துள்ளார்.
அமெரிக்க ஓபன் மூன்றாவது சுற்றின் ஒற்றையர் பிரிவில் நம்பர் 2 வீரரான நோவக் ஜோக்கோவிச்சை எதிர்கொண்டு விளையாடினார் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸி பாபிரின்.
விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் முதல் இரண்டு செட்களிலும் ஆதிக்கம் செலுத்தி பாபிரின், 6-4, 6-4 என நேர் செட் கணக்கில் வீழ்த்தி 2-0 என முன்னிலை பெற்றார். மூன்றாவது செட்டில் கம்பேக் கொடுத்த ஜோகோவிச், 6-2 என கைப்பற்றி 2-1 என மாற்றினாலும், 4வது செட்டை மீண்டும் 6-4 என கைப்பற்றிய பாபிரின் அசத்தலான வெற்றியை பதிவுசெய்தார்.
இயல்பற்ற 14 இரட்டை தவறுகள் மற்றும் 49 தேவையற்ற தவறுகள் ஜோக்கோவிச்சை ஒரு மோசமான தோல்விக்கு அழைத்துச்சென்றது. இந்த தோல்வியின் மூலம் 18 ஆண்டுகளில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து லீக் சுற்றோடு வெளியேறியிருக்கிறார் ஜோக்கோவிச்.
சாம்பியன் பட்டங்களை வாரிக்குவித்த நோவக் ஜோக்கோவிச் தோல்விக்கு பிறகு இணையதளம் முழுவதும் நோவக்கின் தோல்வியை விமர்சித்து வருகிறது, அதேபோல பாபிரினின் ஆக்ரோசமான கொண்டாட்டம் குறித்தும் பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அவருக்கு இருக்கும் உடல் நல பிரச்னையால் தான் தோல்வியை சந்தித்தார் என நோவக்கின் ரசிகர்கள் பதில் பதிவிட்டுவருகின்றனர்.
ஆனால் 2020 ஆஸ்திரேலியா ஓபனின் போது தசைப்பிடிப்பின் காரணமாக ஃபெடரர் தோல்வியை தழுவியபோது நோவக் மிகவும் மோசமான கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினார். அதை ஒப்பிட்டு பார்க்கும்போது பாபிரினின் கொண்டாட்டம் ஒன்று பெரிதாக இல்லை என பதில்பதிவிட்டு வருகின்றனர்.