இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியாவும், டி20 தொடரை இந்தியாவும் கைப்பற்றிய நிலையில் வரும் 17 ஆம் தேதி முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆரம்பமாக உள்ளது. அதற்கு இந்திய அணி வீரர்கள் ஆயத்தமாகும் வகையில் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய ஏ அணியுடன் விளையாடி வருகிறது. முதல் பயிற்சி ஆட்டம் சமனில் முடிந்த நிலையில் நேற்று ஆரம்பமான இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் இந்தியாவும், ஆஸ்திரேலிய ஏ அணியும் விளையாடி வருகின்றன. பகலிரவு போட்டியாக இந்த ஆட்டம் நடைபெற்று வருகிறது.
முதல் இன்னிங்ஸில் இந்தியா 194 ரன்களை எடுத்தது. ஆஸ்திரேலிய ஏ அணி 108 ரன்களை எடுத்தது. இந்நிலையில் இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 90 ஓவர் முடிவிற்கு 4 விக்கெட் இழப்பிற்கு 386 ரன்களை எடுத்துள்ளது.
ஹனுமா விஹாரி மற்றும் பண்ட் என இருவரும் சதம் விளாசினர். விஹாரி 104 ரன்களுடனும், பண்ட் 103 ரன்களுடனும் விக்கெட்டை இழக்காமல் களத்தில் உள்ளனர். மயங்க் அகர்வால் 61 ரன்களும், சுப்மன் கீழ் 65 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி இந்த ஆட்டத்தில் 472 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. பண்ட் அதிரடியாக விளையாடி 73 பந்துகளில் 103 ரன்களை குவித்துள்ளார்.