இலங்கையில் ஒரு நாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் தொடர்களில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் அணி கொழும்பு சென்றது.
ஷிகர் தவான் தலைமையிலான இந்த அணியில் 6 வீரர்கள் முதன் முறையாக சர்வதேச அரங்கில் களமிறங்க உள்ளனர். ஒருநாள் போட்டிகள் மூன்றும் 20 ஓவர் போட்டிகள் மூன்றும் இத்தொடரில் நடைபெற உள்ளன. ஜூலை 13ஆம் தேதி இத்தொடர் தொடங்க உள்ள நிலையில் அதற்கு முன்னதாக இரு வாரங்கள் தனிமைப்படுத்திக்கொண்டபின் இந்திய வீரர்கள் தற்போது அங்கு புறப்பட்டுள்ளனர்.
கொழும்பு புறப்படும்முன் பேசிய கேப்டன் ஷிகர் தவான், இலங்கை தொடரில் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் இளம் வீரர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த இது சிறந்த வாய்ப்பு என்றும் தெரிவித்தார். இத்தொடருக்கான இந்திய அணிக்கு ராகுல் டிராவிட் பயிற்சியாளராகவும் புவனேஷ்வர் குமார் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
20 பேர் கொண்ட இந்த அணியில் ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன், யுஸ்வேந்திர சாகல், இஷன் கிஷன், தேவ்தத் படிக்கல் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். விராட் கோலி தலைமையிலான மற்றொரு அணி இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது குறிப்பிடத்தக்கது.