இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் பெற்ற வெற்றியை அடுத்து புது உற்சாகத்துடன் காணப்படுகிறது. அந்நிய மண்ணில் இந்திய அணியின் செயல்பாடுகள் பெரிதும் விமர்சிக்கப்படும். தென்னாப்பிரிக்கா தொடரில் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி பெற்றதையடுத்து விமர்சனங்கள் எழுந்தன. வீரர்கள் தேர்வு வரை விமர்சிக்கப்பட்டது. டெஸ்ட் போட்டியில் ரோகித் ஷர்மாவுக்கு வாய்ப்பு கொடுத்தது ஏன்? ரகானேவை ஆடும் லவனில் சேர்க்காதது ஏன் என்றெல்லாம் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன. பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கோபமடைந்த கோலி நீங்களே ஒரு சிறந்த அணியை தேர்வு செய்து கொடுங்கள் எனக் கூறினார்.
ஆனால் இந்த விமர்சனங்களுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஒருநாள் மற்றும் டி20 தொடரை வென்று இந்திய அணி சாதனை படைத்தது. இந்த வெற்றிக்கு பிறகு பேசிய கேப்டன் கோலி, ஒரு குழுவாக எங்களுக்கு கிடைத்த வெற்றி என்றார். இந்திய அணியின் தொடர் வெற்றி, அவர்களின் அணுகுமுறை போன்றவற்றை ஆராய்ந்து அடுத்தாண்டு உலகக்கோப்பை வெல்ல வாய்ப்புள்ளதாக முன்னாள் வீரர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
பேட்டிங்கில் ஒரு பெரும் படையே இந்திய அணியில் உள்ளது. ரோகித், தவான், கோலி, ரகானே, கே.எல்.ராகுல், மணீஷ் பாண்டே, தோனி, ஹர்திக் பாண்ட்யா, ரெய்னா, என பெரும் படையே தற்போது தயாராக உள்ளது. போட்டியின் போது யாரேனும் ஒரு வீரருக்கு காயம் ஏற்பட்டால் கூட எந்தப் பிரச்னையும் இருக்காது. ஆனால் பந்துவீச்சை பொறுத்தவரை சுழற்பந்து வீச்சாளர்களுக்குள் கடும் போட்டி உள்ளது. சாஹல், குல்தீப் யாதவின் சிறந்த செயல்பாடுகளினால், முன்னணி வீரர்களான அஸ்வின், ஜடேஜா ஆகியோருக்கே அணியில் இடம் கிடைக்காத சூழல் உள்ளது. மேலும் அக்ஷர் பட்டேலும் உள்ளார். எனவே சுழற்பந்து வீச்சு பொறுத்த வரையில் பாதிப்பு இருக்காது.
போட்டியின் போது அணிக்கு ஏற்றவாறுதான் வீரர்கள் தேர்வு இருக்கும். வேகப்பந்து வீச்சை பொறுத்த வரையில் பும்ரா, புவனேஸ்வர் குமார், ஷமி, இஷாந்த் போன்றோர் உள்ளனர். ஆனால் உலகக்கோப்பை தொடரின் போது இரு பந்துவீச்சாளர்களுக்கு காயம் ஏற்பட்டால் நிலைமை மோசமானதாகிவிடும். எனவே அதனை கருத்தில் கொண்டு இளம்பந்து வீச்சாளர்களை தயார் செய்ய தொடங்கிவிட்டனர்.
இதுதொடர்பாக இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் அருண் கூறுகையில், இந்திய அணியில் தற்போது உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சாளர்களான பும்ராவும், புவனேஸ்வர்குமார் உள்ளனர். ஆனால் மேலும் சில சிறந்த வீரர்களை உருவாக்க வேண்டியுள்ளது. அதனால்தான் இலங்கையில் நடக்கவுள்ள முத்தரப்பு கிரிக்கெட் போட்டியில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இளம் வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். பந்துவீச்சு குழுவின் பலத்தை அறிவதற்காக அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட்டும் குத்துச்சண்டை போல்தான், நீங்கள் களத்தில் இறங்கி அடிவாங்க தயங்கினால் உங்களால் திருப்பி அடிக்க முடியாது. இந்த அணி தோல்விக்கு எல்லாம் பயப்படவில்லை. அவர்கள் சிந்தனையெல்லாம் வெற்றி பெற வேண்டும் என்பது தான் எனக் கூறியுள்ளார்.