’எங்கள் உயிரை காப்பாற்றிய 30 செகண்ட்’: பங்களா. வீரர் தமிம் இக்பால் அதிர்ச்சி பேட்டி!

’எங்கள் உயிரை காப்பாற்றிய 30 செகண்ட்’: பங்களா. வீரர் தமிம் இக்பால் அதிர்ச்சி பேட்டி!
’எங்கள் உயிரை காப்பாற்றிய 30 செகண்ட்’: பங்களா. வீரர் தமிம் இக்பால் அதிர்ச்சி பேட்டி!
Published on

நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் 2 மசூதிகளில் நேற்று முன் தினம் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 50 பேர் உயிரிழந்துள்ளனர். 10 பேர் நிலைமை சீரியஸ் ஆக இருக்கிறது. இந்தச் சம்பவம் உலகம் முழுவதும், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவத்தில் இந்தியர்கள் 4 பேரும், இந்திய வம்சாவளியின் 3 பேரும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். தெலங்கானாவைச் சேர்ந்த 2 பேரும், கேரளாவைச் சேர்ந்த ஒருவரும் உயிரிழந்ததாகவும் தகவல். குஜராத்தைச் சேர்ந்த 2 பேரும் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வலதுசாரி ஒருவரை கைது செய்திருக்கிறது போலீஸ்!

கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள அல்நூர் மசூதியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் அந்த நாட்டுக்கு கிரிக்கெட் விளையாட சென்றிருந்த பங்களா தேஷ் கிரிக்கெட் வீரர்கள், நூலிழையில் உயிர் தப்பியிருக்கிறார்கள். இதையடுத்து நேற்று அங்கு நடைபெறுவதாக இருந்த கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள், நேற்று மாலை டாக்கா திரும்பினர். துப்பாக்கிச் சூடு சம்பவம் பற்றிய அதிர்ச்சியில் இருந்து அவர்கள் இன்னும் மீளவில்லை. 

 ‘’ நாங்கள் அதிர்ஷ்டக்காரர்கள் என்பதை மட்டுமே இப்போது சொல்ல முடியும். உங்கள் பிரார்த்தனையால் நாடு திரும்பியிருக்கிறோம். அங்கு என்ன நடந்தது என்பதையும் நாங்கள் பார்த்ததையும் என்னால் விளக்க இயலாது. அணியில் யாரும் நிம்மதியாக தூங்கவில்லை. உடனடியாக நாடு திரும்ப ஏற்பாடுகளை செய்த நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு நன்றி’’ என்கிறார் பங்களாதேஷ் டெஸ்ட் கிரிக்கெட் அணி கேப்டன் மகமத்துல்லா.

(மகமத்துல்லா)

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் தமிம் இக்பால், இன்னும் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்.‘’உயிர் தப்பிய அதிர்ச்சியில் இருந்து மீள்வது எளிதானதல்ல. இதற்கு கொஞ்சம் நாட்களாகும்’’ என்கிறார், சோகமாக!

அங்கு தான் நேரில் கண்டதை விவரித்தார் அவர்.

’’நான், முஷ்பிகும் ரஹீம், மகமத்துல்லா மூவரும் மைதானத்தில் இருந்து அப்படியே மசூதிக்கு செல்ல முடிவு செய்திருந்தோம். பஸ் 1.30 மணிக்கு புறப்பட இருந்தது. ஆனால், மகமத்துல்லா பத்திரிகையாளர் சந்திப்புக்குச் சென்றுவிட்டார். முடிந்து வரும்வரை காத்திருந்தோம். இதனால் தாமதமானது. அவர் வந்ததும் டிரெஸ்சிங் ரூமில் தைஜுல் இஸ்லாமுடன் கால்பந்து விளையாடினோம். இதில் சில நிமிடங்கள் கழிந்தது. இதற்கு பின், அணி ஆய்வாளர் ஸ்ரீனிவாஸ் சந்திரசேகரனையும் சவும்யா சர்காரையும் (இருவரும் இந்துக்கள்) ஓட்டலில் விட்டுவிட்டு மசூதி செல்ல முடிவு செய்தோம்.

அணியில் இருந்த மேலும் சில வீரர்களும் எங்களுடன் இணைந்துகொண்டனர். பேருந்து மசூதி அருகே சென்றபோது, ஜன்னல் வழியாக பார்த்தால், சிலர் கீழே சரிந்து விழுந்து கொண்டிருந்தனர். குடித்துவிட்டோ, அல்லது மயக்கத்திலோ, விழுகிறார்களோ என நினைக்கும்போதே, மற்றொருவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அவர்கள் அனைவரும் தொழுகைக்கான தொப்பி அணிந்திருந்தனர். உடனடியாக மசூதி முன் பேருந்தை நிறுத்தினார் டிரைவர். அப்போது அங்கு ஓடிக்கொண்டிருந்த பெண் ஒருவரிடம் அவர் விசாரித்தார். ’யாரோ, உள்ளிருந்து துப்பாக்கியால் சுடுகிறார்கள், உள்ளே செல்லாதீர்கள், ஓடிவிடுங்கள்’ என்று அழுதபடியும் நடுங்கியபடியும் சொன்னார். 

இதைக் கண்டதும் எங்களுக்கு பீதி. பேருந்தை பின்னால் எடுக்கச் சொன்னோம். எடுக்கவில்லை. மசூதிக்குள் இன்னும் சிலர் ரத்த வெள்ளத்தில் விழுந்து கொண்டிருந்ததை கண்முன் பார்த்தோம். பின் கத்தத் தொடங்கினோம். அதுவரை அங்கு போலீஸ் யாரும் இல்லை. பிறகுதான் கமாண்டோ படையினர் வந்தனர். நாங்கள் ஏழு எட்டு நிமிடம் வரை உயிரை கையில் பிடித்துக்கொண்டு பேருந்துக்குள் இருந்தோம். பிறகு கதவை எட்டி உதைத்தோம். 

(தமிம் இக்பால்)

டிரைவர் அதைத் திறந்தார். இறங்கி பூங்கா வழியாக ஓடத் தொடங்கினோம். அப்போது இன்னொரு பயமும் ஏற்பட்டது. நாங்கள் பெரிய பேக்கை வைத்துக்கொண்டு இப்படி ஓடுவதைக் கண்டால், போலீஸ்காரர்கள் என்ன நினைப்பார்கள் என்று. சிறிது தூரத்துக்குப் பின் ஓடுவதை நிறுத்தி விட்டு நடந்து சென்றோம். நேராக மகமத்துல்லா அறைக்குச் சென்று டிவியை பார்த்தால், துப்பாக்கிச் சூடு சம்பவம் நேரலையாக ஓடிக்கொண்டி ருந்தது. ஆடிப் போய்விட்டோம். 

நாடு திரும்புவதற்காக கிறிஸ்ட்சர்ச் விமான நிலையம் போகும்போது ஒவ்வொருவரும் சொல்லிக்கொண்டோம். முப்பது செகண்ட் நிலைமை மாறியிருந்தால், நமது உடல்தான் விமானம் ஏறியிருக்கும் என்று! கண்ணுக்கு முன் மரணத்தைச் சந்தித்தோம். இதை ஒரு போதும் மறக்க முடியாது’’ என்றார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com