வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான முதல் ஒரு நாள் போட்டியில் பங்களாதேஷ் அணி, 48 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணியின் தமிம் இக்பால் சதமடித்தார்.
பங்களாதேஷ் கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் கைப்பற்றியது. இந்த தொடரில் பங்களாதேஷ் அணி மோசமாகத் தோற்றது.
இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகிறது. இதன் முதல் போட்டி நேற்று நடந்தது. டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தமிழ்ம் இக்பால், அனாமுல் ஹக் களமிறங்கினர். ஹக் மூன்று பந்துகளை சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் ஹோல்டர் பந்துவீச்சில் அவுட் ஆனார். அடுத்து ஷகிக் அல் ஹசன் வந்தார். தமிமிமும் ஷகிப்பும் நிதானமாக ஆடினார். வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்களால் இருவரையும் பிரிக்க முடியவில்லை.
அபாரமாக ஆடிக்கொண்டிருந்த ஷகிப் 97 ரன்களில் பிஷூ சுழலில் ஹெட்மைரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். வெறும் 3 ரன்களில் அவர் சதத்தை தவறவிட்டார். அடுத்து வந்த சபிர் ரஹ்மான், வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினார். அடுத்து தமிம் இக்பாலுடன் முஷிபி குர் ரஹ்மான் இணைந்தார். முஷிபிகுர் அதிரடியாக ஆட, நிதான ஆட்டத்தை கடைபிடித்த தமிம் இக்பால் சதமடித்தார். இது அவருக்கு பத்தாவது சதம்.
இதையடுத்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் பங்களாதேஷ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 279 ரன்கள் எடுத்தது. தமிம் இக்பால் 130 ரன்க ளும் முஷ்பிகுர் 11 பந்துகளில் 30 ரன்களும் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் பிஷூ 2 விக்கெட்டை வீழ்த்தினார்.
பின்னர் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் எடுத்து 48 ரன்கள் வித்தி யாசத்தில் தோல்வியைத் தழுவியது.
அந்த அணியின் அனுபவ வீரர் கிறிஸ் கெய்ல் 40 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். ஹெட்மைர் 52 ரன்கள் எடுத்தார். பங்களாதேஷ் வீரர்களின் துல்லியமான பந்துவீச்சில் வேறு யாரும் நிலைத்து நிற்கவில்லை.
பங்களாதேஷ் தரப்பில் மஷ்ரப் மோர்டாஸா 4 விக்கெட்டை சாய்த்தார். முஸ்தாபிஷூர் ரஹ்மான் 2 விக்கெட்டுகளையும் மெஹிடி, ரூபெல் ஹூசைன் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். சதமடித்த தமிம் இக்பால் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
அடுத்தப் போட்டி 25-ம் தேதி நடக்கிறது.