செய்தியாளர்: சந்தனகுமார்
கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டி கடந்த 18 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன, தொடரின் நான்காவது நாளான நேற்று நடைபெற்ற சைக்கிளிங் விளையாட்டில் மகளிர் தனி பிரிவில் தமிழக வீராங்கனை ஸ்ரீமதி தங்கம் வென்றார். அதேபோல மகளிர் அணி பிரிவில் ஸ்ரீமதி, தன்யதா, தமிழரசி, பூஜா ஸ்வேதா ஆகியோர் இணைந்த தமிழக அணி தங்கம் வென்று அசத்தினர். ஆண்கள் ஜூனியர் பிரிவில் கிஷோர், புருஷோத்தமன், மைக்கேல் அந்தோணி ஆகியோர் இணைந்து சைக்கிளிங் போட்டியில் வெண்கலம் வென்றனர்.
சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற ARTISTIC யோகா பிரிவில் தமிழக வீரர் சித்தேஷ் 133.75 புள்ளிகள் பெற்று வெள்ளிப்பதக்கம் வென்றார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ஹரியானா உடனான இறுதிப் போட்டியில் 33-40 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வியடைந்து வெள்ளிப்பதக்கம் வென்றனர். ஆண்கள் அணி அரை இறுதிப் போட்டியில் ராஜஸ்தானி அணியிடம் தோல்வியடைந்து வெண்கலம் வென்றனர்.
இந்திய ஸ்குவாஷ் அகாடமியில் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதிப் போட்டியில் தமிழ்நாடு வீராங்கனைகள் பூஜா ஆர்த்தி மற்றும் தீபிகா ஆகியோர் மோதினர் அதில் 3-0 என்ற நேர் செட் கணக்கில் பூஜா ஆர்த்தி அசத்தல் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறினார். இதையடுத்து நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் பூஜா ஆர்த்தி, மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த நிருபமா துபே ஆகியோர் களம் காண உள்ளனர்.
தமிழ்நாடு இதுவரை 6 தங்கம், 2 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 13 பதக்கங்களை வென்று முதல் இடத்தில் உள்ளது. 4 தங்கம், 6 வெள்ளி, 11 வெண்கலம் என 21 பதகங்களுடன் மகாராஷ்டிரா 2வது இடத்திலும். 4 தங்கம், 4 வெள்ளி, 8 வெண்கலம் என 16 பதக்கங்களுடன் ஹரியானா 3 வது இடத்திலும் உள்ளது.