தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக அணி தனது முதல் லீக் போட்டியில் மத்திய தொழில்துறை பாதுகாப்பு அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.
தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. 41 அணிகள் பங்குபெறும் தேசிய ஹாக்கி தொடரில் தமிழக அணி தனது முதல் போட்டியை மத்திய தொழில்துறை பாதுகாப்பு அணியுடன் இன்று மோதியது. சென்னை பெரம்பூர் ஐ.சி.எப் ஷாஹித் ஹாக்கி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் தமிழக அணி வீரர் ஜோஷ்வா, ராயர், செல்வராஜ், மணிகண்டன் ஆகியோர் சிறப்பாக விளையாடி தமிழக அணிக்காக கோல் அடித்தனர். இதனால் மத்திய தொழில்துறை பாதுகாப்பு அணியை 4-2 என்ற கணக்கில் தமிழக அணி வெற்றி பெற்றது.
முன்னதாக எழும்பூர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள மத்தியப் பிரதேசம் மற்றும் தெலங்கானா அணிகள் விளையாடின. இதில் மத்திய பிரதேச அணி தெலுங்கானா அணியை 10-1 என்ற கணக்கில் வென்றது. மகாராஷ்ட்ரா ஹாக்கி அணி பீகார் அணியை 10-0 என்ற கணக்கிலும், காஷ்மீர் அணி அந்தமான் அணியை 12-0 என்ற கணக்கிலும் வீழ்த்தின. பெரம்பூர் ஐ.சி.எப் ஷாஹித் ஹாக்கி மைதானத்தில் நடைபெற்ற போட்டிகளில் குஜராத் அணி மிசோரம் அணியை 3-2 என்ற கணக்கிலும், ஆந்திரா அணி திரிபுரா அணியை 13-0 என்ற கணக்கிலும் வென்றன. பெங்களூரு மற்றும் சத்தீஸ்கர் அணி இடையே நடைபெற்ற ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் ட்ராவில் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.