சென்னையை சேர்ந்த நேத்ரா குமணன், தனது 12 வயதிலிருந்து பாய்மர படகு போட்டியில் பங்கேற்று அசத்தி வருகிறார். எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ பயின்று வரும் அவர், கடந்த மூன்று ஆண்டுகளாக ILCA 6 பிரிவில் தொடர்ந்து போட்டியில் பங்கேற்று வருகிறார்.
ஒலிம்பிக் தொடரில் பங்கேற்கும் வாய்ப்பை பெறுவதற்கான LAST CHANCE REGETTA தொடர் பிரான்ஸில் நடைபெற்றது. இதில் ஒட்டுமொத்தமாக 67 புள்ளிகள் பெற்று 5வது இடம் பிடித்தார்.
இதன் மூலம் பாய்மர படகு போட்டியில் வளர்ந்து வரும் நாடுகளுக்கான ஒதுக்கீட்டில் நேத்ரா குமணன் மீண்டும் ஒலிம்பிக் தொடரில் பங்கேற்பதற்கான வாய்ப்பை பெற்றுள்ளார். இதையடுத்து அவருக்கு பிரதமர் மோடி மற்றும் தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேத்ராவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முன்னதாக கடந்த 2020 ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் கலந்துகொண்டு பாய்மர படகு போட்டியில் பங்கேற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்திருந்தார் நேத்ரா குமணன்.