மகளிர் இருபது ஓவர் உலகக்கோப்பையில், போட்டி தொடங்குவதற்கு முன்னதாக பறை இசைக்கப்பட்டது ரசிகர்களைக் கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது.
தமிழரின் வாழ்வியலிலும் வரலாற்றிலும் பறை, இன்றியமையாத இசைக் கருவியாக இருக்கிறது. தொன்றுத் தொட்ட தமிழரின் அடையாளங்களில் தோல் கருவியான பறைக்கு மிக முக்கிய இடமுண்டு. இத்தகைய சிறப்புகளைப் பெற்ற பறை, மகளிர் டி20 உலகக்கோப்பையில் இசைக்கப்பட்டது.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பையில், முதல் போட்டியில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டி தொடங்குவதற்கு முன்னதாக அந்நகரில் வசிக்கும் தமிழர்களால் பறை இசைக்கப்பட்டது. அலங்கார உடைகளில் தோன்றிய சிட்னி வாழ் தமிழர்கள், தமிழரின் இசையை அரங்கேற்றி மெய்சிலிர்க்க வைத்தனர். இன்னிங்ஸ் இடைவேளையின் போதும், மைதானத்தில் பறை இசைக்கப்பட்டது காண்போரை கவர்ந்தது.
மகளிர் உலகக்கோப்பை போட்டி ஒன்றில் தமிழ் பாரம்பரிய இசையான பறை ஒலிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.