ஐபிஎல் போட்டி நடைபெற்று வரும் சேப்பாக்கம் மைதானத்திற்குள் ரசிகர்கள் மெரினா போராட்டத்தைப் போல் செல்போனில் டார்ச் அடித்து தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தினர்.
சேப்பாக்கம் மைதானத்தில் ஒருபுறம் போட்டி மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. கொல்கத்தா வீரர்கள் சிக்ஸர்களும், பவுண்டரிகளுமாக விளாச, சென்னை அணி விக்கெட்டுகளை வீழ்த்தி வருகிறது. இதற்கு நடுவே மைதானத்தில் உள்ள ரசிகர்கள் காவிரி விவகாரத்திற்காக பல்வேறு வழிகளில் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
முதலில் மைதானத்தில் காலணி வீசியும், ஆடைகளை எறிந்தும் காவிரி விவகாரத்திற்காக தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தினர். நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சிலர் இதுபோன்ற செயலில் ஈடுபட்டது பின்னர் தெரிய வந்தது. அவர்கள் கொடிகளையும் உள்ளே கொண்டு சென்று காட்டினர். அப்போது 4 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் 2 நிமிடங்கள் மட்டும் போட்டி தடைபட்டது. பின்னர் மீண்டும் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதனையடுத்து, மெரினாவில் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது ஆயிரக்கணக்கானோர் மொபைலில் டார்ச் அடித்து தங்களது உணர்வை வெளிப்படுத்தியதை போல், இன்றைய போட்டியிலும் நூற்றுக்கணக்கானோர் செய்தனர். இது பார்ப்பதற்கு மிகவும் அற்புதமாக இருந்தது. காலணி வீச்சை காட்டிலும் மொபைல் டார்ச் காட்டி உணர்வுகளை வெளிப்படுத்தியது நல்ல முறையாக இருந்தது. வரவேற்பும் மைதானத்தில் இருந்துள்ளது. அதனால் தான் அடுத்தடுத்து நிறைய பேர் ஆதரவு தெரிவித்து வெளிச்சம் காட்டியுள்ளனர்.